Published : 20 Feb 2021 02:45 PM
Last Updated : 20 Feb 2021 02:45 PM

விளம்பரப் பிரியர்களுக்கு ஆளுநர் ஊக்கம் தரக்கூடாது: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்

விளம்பரப் பிரியர்களுக்குஆளுநர் ஊக்கம் தரக்கூடாது என்று அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். ஆளும் கட்சி அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் திமுக வழங்கிய நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி வழங்கினார். குறிப்பாக முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை ஆளுநரிடம் நேற்று துரைமுருகன் தலைமையிலான திமுகவினர் வழங்கினர். இதுகுறித்து விமர்சித்துள்ள அமைச்சர் பாண்டியராஜன், ''திமுக தொடர்ந்து அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார். இல்லாததால்தான் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளிக்கின்றனர்.

ஊடகத்தில் செய்திகள் வர வேண்டுமென வேண்டுமென்றே திமுகவினர் புகார் அளிக்கின்றனர். இதுபோன்ற விளம்பரப் பிரியர்களுக்கு ஆளுநர் ஊக்கம் தரக்கூடாது என்று ஊடகங்கள் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன். ஆளுநரிடம் திமுக அளித்த முதல் பட்டியலில் எந்தவித சாரமும் இல்லை என்று உலகத்துக்கே தெரியும்.

இரண்டாவது முறையாக ஒரு மரியாதைக்காக ஆளுநர் திமுகவினரைச் சந்திக்கிறார். இதை அரசியல் ரீதியாக விளம்பரம் செய்ய ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x