Published : 20 Feb 2021 11:55 AM
Last Updated : 20 Feb 2021 11:55 AM

போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி; கைது செய்த போலீஸார்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

கைது செய்யப்பட்ட ஜோதிமணி - கே.எஸ்.அழகிரி

சென்னை

நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 20) வெளியிட்ட அறிக்கை:

'கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை சிதிலமடைந்த காரணத்தால் புதியதாக சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த சிலை அமைக்கும் பணியை பார்வையிட சென்ற கரூர் மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணி கட்டுமானப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாக கூறி கடும் ஆட்சேபனையை தெரிவித்தார். சிலையின் பீடத்தில் கை வைத்ததுமே, அவை அனைத்தும் உதிர்ந்து போகிற வகையில் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், காந்தியின் சிலைக்கு அமைக்கப்படுகிற அடித்தளம் வலுவானதாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினார்.

இதற்கு அரசு அதிகாரிகள் எந்த உத்தரவாதத்தையும் தராத நிலையில், போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ஜோதிமணியை காவல்துறையினர் கைது செய்து, குண்டுக்கட்டாக பலவந்தமாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி உள்ளனர். இந்த காட்சியை பார்க்கிற போது தமிழகத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு விரோதமான அடக்குமுறையை ஏவிவிடுகிற காட்டாட்சியாகவே தமிழக ஆட்சியாளர்களை கருத வேண்டியிருக்கிறது.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணியை கைது செய்யும் போது அடக்குமுறையை கையாண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன்.

காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், காந்தியின் சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டுமென்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x