Published : 20 Feb 2021 11:32 AM
Last Updated : 20 Feb 2021 11:32 AM
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை 4 நாட்கள் கொண்டாடும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை போடி நாயக்கனூரில் ஓபிஎஸ்சும், ஆர்.கே.நகரில் முதல்வர் பழனிசாமியும், தி.நகரில் கே.பி.முனுசாமியும் மற்ற பிற ஊர்களில் பிற தலைவர்களும் கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
“அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த, ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 24, 28, மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆகிய 4 நாட்கள் கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கட்சி, எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, உள்ளிட்ட பல்வேறு அணிகள் நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும்.
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று ஆங்காங்கே அவருடைய உருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்சியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT