Published : 20 Feb 2021 09:51 AM
Last Updated : 20 Feb 2021 09:51 AM

உள்துறை அமைச்சர் அமித் ஷா கையில் திமுக கொடுத்த முதல்கட்ட ஊழல் பட்டியல்: துரைமுருகன் பேட்டி

சென்னை

திமுக கொடுத்த அமைச்சர்கள் மீதான முதல்கட்ட ஊழல் புகார் பட்டியல் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக சார்பில் இரண்டாம் கட்ட பட்டியலை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு அளித்தது. அவருடன் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு துரைமுருகன் அளித்த பேட்டி:

நீங்கள் ஊழல்பட்டியல் கொடுப்பதால் என்ன நன்மை?

வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள், பொதுவாக நாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கொடுக்கிறோம். விஜிலென்ஸில் இருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி என்கிற அமைச்சர் மீது விஜிலென்ஸில் கொடுத்த ஊழல் பட்டியலில் மூகாந்திரம் இல்லைன்னு மறுத்துள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்றம் அப்படி சொன்னது தப்புன்னு சொல்லி இருக்காங்க. ஆனால் ஆளுநர் நாங்கள் கொடுத்த பட்டியலை உள்துறை அமைச்சருக்கு அனுப்பியிருப்பதாக எங்களுக்கு தகவல்.

அடுத்து மூன்றாம் கட்ட பட்டியல் கொடுப்பீர்களா?

அப்படி ஒரு வாய்ப்பில்லை, ஏனென்றால் அப்போது இந்த அரசாங்கமே இருக்காது.

4 ஆண்டு காலமாக தராமல் தேர்தல் நேரத்தில் தருகிறீர்களே?

4 ஆண்டுகாலமாக அல்ல இந்த புகார் பட்டியல் எப்போதெல்லாம் கிடைத்ததோ அப்போதெல்லாம் அதுபற்றி அடிக்கடி பேசியுள்ளோம். நீதிமன்றம் சென்றுள்ளோம், விஜிலென்ஸ் கமிஷனில் நேராக கொடுத்துள்ளோம் அதில் பயனில்லை என்பதால் ஆளுநரிடம் புகார் பட்டியல் அளிக்கிறோம். நடவடிக்கை எடுக்கும் கடைசி அதிகாரம் ஆளுநருக்குத்தான் உள்ளது.

ஆனால் மக்களவையில் ஒரு சட்டம் போட்டுள்ளார்கள், இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது, ஆனால் இவர்கள் என்ன சட்டம் போட்டுள்ளார்கள் தெரியுமா? அமைச்சர்கள் மீது புகார் வந்தால் அதுகுறித்து ஆதாரம் உண்டா இல்லையா என விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை போட்டுள்ளார்கள். அதையெல்லாம் தூள் தூள் ஆக்கிவிடுவோம் நாங்கள்.

காலக்கெடு எதுவும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளீர்களா?

அப்படியெல்லாம் காலக்கெடு ஆளுநருக்கு கொடுக்க முடியாது, நாங்கள் கொடுத்த புகார் தூசி படியாமல் அதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்கள். அதை மத்திய உள்துறை அமைச்சர் வைத்துள்ளார். தேவைப்படும்போது நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு துரைமுருகன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x