Published : 19 Feb 2021 07:45 PM
Last Updated : 19 Feb 2021 07:45 PM
தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைத்து முதல்வராகவும் பாஜக கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாகவும் பழனிசாமி நீடிக்கிறார் என கோவை, காரமடையில் இன்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதிமுகவின் எஃகுக் கோட்டையில் (கொங்கு மண்டலம்), கடந்த மக்களவைத் தேர்தலிலேயே ஓட்டையைப் போட்டு விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடையில் திமுக சார்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பரப்புரைக் கூட்டம் இன்று (19-ம் தேதி) நடந்தது. இதில், மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டத்துக்குட்பட்ட குன்னூர், கூடலூர், உதகை தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சிக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர்கள் முபராக் (நீலகிரி), சி.ஆர்.ராமச்சந்திரன் (கோவை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் இருந்து சில எடுக்கப்பட்டன. அந்த மனுவை அளித்தவர்கள் மு.க.ஸ்டாலினிடம் நேரிடையாகக் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். திமுக அரசு அமைந்ததும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் முன்னிலையில் கோரிக்கை மனு அளித்த பெட்டியைப் பூட்டி சீல் வைத்தார்.
அதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
''தமிழகத்தைப் பூந்தோட்டம் என்ற கலைஞர், அதில் கள்ளிச் செடியும் உள்ளது என்றார். அத்தகைய கள்ளிச்செடியை அகற்றும் தேர்தல்தான் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தல். கோவையில் நடக்கும் பல விஷயங்கள் மர்மமாக உள்ளன.
அதில், குடிநீர் விநியோக முறையும் ஒன்று. உள்ளாட்சித் துறையின் முக்கியப் பணியான குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
மாநகராட்சியில் குடிநீர் விநியோகிக்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 26 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
ஒரு அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?. திமுக உள்ளிட்ட கட்சியினர் இதுகுறித்துக் கேட்ட போதும் சொல்லவில்லை. குடிநீர்த் திட்டத்தைத் தனியாரிடம் கொடுக்கவில்லை. குடிநீர்க் குழாய்களைச் சரி செய்யும் பணிதான் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவிக்கிறது.
மாநகராட்சியின் 72 வார்டுகளில் (ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகள்) சூயஸ் நிறுவனத்தினர் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனில் இனி குடிநீர் விநியோகம், குடிநீர் க்கட்டணம் நிர்ணயிப்பதை அவர்கள்தான் மேற்கொள்வார்களா? அதற்கு அரசு என்ன உத்தரவாதம் தந்துள்ளது என்ற தகவல் இல்லை.
சூயஸ் திட்டத்தைப் பற்றி தவறான தகவல் பரப்பினால், கைது நடவடிக்கை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தரப்பினர் மிரட்டுகின்றனர் என்றால், கோவை வேலுமணியின் குத்தகை பூமியா?, கோவையை மொத்தமாக கொள்ளையடிக்க பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் குத்தகை விடப்பட்டுள்ளதா?. பாலம் கட்டினால்தான் பணம் கொள்ளையடிக்க முடியும் என்பதால், முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாலம் கட்டத் தொடங்கியுள்ளனர்.
சேலம், கோவையில் பழனிசாமியும், வேலுமணியும் பாலங்கள் கட்டுவது மக்களுக்காக அல்ல. ஊழல் செய்வதற்காக. அரசை விமர்சித்தால் கைது என மிரட்டும் வேலுமணியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? அமைதிக்குப் பெயர் போன கோவையைக் கொந்தளிக்கும் நகரமாக மாற்றிய எஸ்.பி.வேலுமணிக்கு, மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா
அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், அதை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோர் மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், இருவரும் ஆளுமைத் திறன் உள்ளவர்கள். ஆனால், ஆளுமைத் திறன் இல்லாத முதல்வர் கே.பழனிசாமி. அவர் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை. வேறு வழியில்லாததால் அவர் முதல்வராக்கப்பட்டார்.
முதல்வர் பதவியைப் பயன்படுத்தி, அவர் தமிழகத்துக்கு நன்மை செய்யவில்லை. அதைவிடக் கெடுதல்தான் அதிகம் செய்து வருகிறார். தமிழ்நாட்டு மானத்தை அடமானம் வைத்துவிட்டார். டெல்லி பாஜக அரசுக்குக் கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். தமிழகத்தின் உரிமையை அடமானம் வைத்து முதல்வராக அவர் நீடித்து வருகிறார்.
தமிழரின் உரிமை, தமிழ்நாட்டின் உரிமை பற்றி பேசக்கூடாது, குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றை ஆதரித்தால், நாங்கள் உங்களை ஆதரிப்போம் என பாஜக மிரட்டுகிறது. இப்படி பாஜக கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக முதல்வர் பழனிசாமி உள்ளதால், அவரது ஆட்சி இத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது.
தன் பதவியைக் காப்பாற்ற, தமிழகத்தை, தமிழகத்தின் உரிமையை அடமானம் வைத்து விட்டார் பழனிசாமி. இதனால் அவரது ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.
நீலகிரி மக்களின் கோரிக்கை
குன்னூர், உதகை, கூடலூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தேயிலைக்குக் குறைந்தபட்ச விலை தரப்பட வேண்டும். எஸ்டேட் ஊழியர்களுக்கு ஊதியம் முறைப்படுத்த வேண்டும். கட்டிட அனுமதி வழங்கும் முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் ஆகியவை முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை திமுக அரசு அமைந்தவுடன் நிச்சயம் தீர்க்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தப் பல்வேறு பணிகள் செய்து தரப்படும். மலை நகராக உள்ளதால், சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.
கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளையாவது கைப்பற்றி விடலாம் என பழனிசாமி, பன்னீர்செல்வம், வேலுமணி அலைபாய்கின்றனர். கொள்ளையடித்து வைத்த பணத்தை வைத்து, வெற்றி பெற முடியுமா? என பார்க்கின்றனர். அது மக்கள் பணம், கொள்ளையடித்த பணம் என்பது மக்களுக்குத் தெரியும். கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகுக் கோட்டை எனப் பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். இந்த எஃகுக் கோட்டையில், கடந்த மக்களவைத் தேர்தலில் ஓட்டையைப் போட்டு விட்டோம்.
தீர்க்கப்படாத மக்களின் கோரிக்கை
கோவையில் 1,79,143, நீலகிரியில் 2,05,823, ஈரோட்டில் 2,10,618, திருப்பூரில் 93,374, கரூரில் 4,20,546, நாமக்கல்லில் 2,65,151, பொள்ளாச்சியில் 1,75,883 , சேலத்தில் 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எங்கே போனது, உங்களது எஃகுக் கோட்டை?. எஃகுக்கோட்டை ஏன்று ஏமாற்றியதற்கு மக்கள் தக்க பாடத்கைக் கற்பித்தனர். முதல்வர், ஏராளமான அமைச்சர்கள் மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பெருமைப்பட்டீர்களே, இந்த மாவட்டத்தைச் சொர்க்க பூமியாக மாற்றி விட்டீர்களா?. இந்த மாவட்ட மக்களிடம் எந்தக் குறையும் இல்லையா?
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருந்தால், பல ஆயிரம் மக்கள் இங்கு மனுக்கள் அளிக்க வந்து இருப்பார்களா?. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், கவலைகளைத் தீர்க்காமல், ஊர் பெருமைகளைப் பேசுவதால் என்ன பயன்?. கவுண்டர் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, அருந்தியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுத்து, காலமெல்லாமல் மனிதனை வாழ வைக்கக்கூடிய திட்டங்களைக் கொடுத்ததுதான் திமுக ஆட்சி.
ஏமாற்று அறிவிப்புகள்
தற்போது ஆட்சி முடியும் தருவாயில் புறப்பட்டுள்ள பழனிசாமி, கடைசி நேரத்தில் மினி கிளினிக் அமைத்து மக்களை ஏமாற்றுகிறார். வெற்று அறிவிப்புகள், போலி அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கின்றனர். அதைத் தோண்டிப் பார்த்தால், பொய்யான தகவலாக இருக்கும். அல்லது காலம் காலமாக இருக்கக்கூடிய திட்டமாக இருக்கும்.
திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் தனது திட்டமாகப் பழனிசாமி கூறியுள்ளார். 2011, 2016 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை. 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்ததையும் நிறைவேற்றவில்லை. எதையும் நிறைவற்ற முடியாத பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று, வாய்க்கு வந்ததைப் பேசுகின்றார். எல்லாவற்றிலும் நம்பர் 1 என அவர் பேசுகின்றார்.
முதல்வர் பழனிசாமிக்கு ஊழலில் நம்பர் 1 என்ற விருதைத்தான் தர வேண்டும். கடன் வாங்கிக் கஜானாவில் சேர்த்து, அதைச் சுருட்டுவதில் வல்லவர் என்ற விருதைத்தான் தர வேண்டும். இந்திய அளவில் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட ஊழல் அரசு இந்த பழனிசாமியின் அரசு. இதை எந்த நீதிமன்றத்திலும் திமுகவால் நிரூபிக்க முடியும். அதற்கு முன்னதாக, மக்கள் மன்றம் தகுந்த தண்டனை தரும் தேர்தல்தான் இந்தத் தேர்தல். அதன் பின்னர் அமையும் திமுக அரசில் மக்களின் கோரிக்கைகள், 100 நாட்களுக்குள் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு நிச்சயம் அமையும்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT