Published : 19 Feb 2021 05:31 PM
Last Updated : 19 Feb 2021 05:31 PM

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம்; 21-ம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் வரும் 21-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

இது தொடர்பாக, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் இன்று (பிப். 19) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 21-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமைத் தாங்குகிறார்.

இவ்விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது. ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4 லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.

மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் (SCADA) மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x