Last Updated : 19 Feb, 2021 05:13 PM

1  

Published : 19 Feb 2021 05:13 PM
Last Updated : 19 Feb 2021 05:13 PM

டெண்டர் விடாத சாலைக்கு எப்படி நிதி ஒதுக்க முடியும்? ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி

தென்காசி

டெண்டர் விடாத சாலைக்கு எப்படி நிதி ஒதுக்க முடியும், ஊழல் செய்ய முடியும் என கடையநல்லூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி வினவினார்.

மேலும், கரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகள், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகக் கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கிய தமிழக முதல்வர் பழனிசாமி இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். மக்கள் தான் தங்கள் வாரிசாக எண்ணி பாடுபட்டார்கள். ஆனால் கருணாநிதிக்கு பின் அவரது மகன் ஸ்டாலின், அதற்கு பிறகு உதயநிதி என குடும்ப வாரிசுகளை உருவாக்குகின்றனர்.

ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். உண்மையும், தர்மமும், நீதியும்தான் வெல்லும். அது நம் பக்கம் உள்ளது. பொய் வென்ற சரித்திரம் கிடையாது.

ஸ்டாலின் செல்லும் இடம் எல்லாம் பெட்டி வைத்து மனு வாங்குகிறார். பெட்டியை பூட்டி வைத்து, வீட்டுக்கு எடுத்துச் சென்று, 3 மாதம் கழித்து ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியின் சீலை உடைத்து 3 மாதத்தில் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவாராம்.

2019-ல் நாடாளுமன்ற தேர்தலில்போது இதேபோல் ஊர் ஊராகச் சென்று வாங்கிய மனுக்கள் என்ன ஆனது. மக்கள் எல்லாம் ஏமாளிகள் என நினைக்கிறார்கள். மக்கள் ஏமாற வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு காலத்திலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதன் மூலம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரலாம் என ஸ்டாலின் திட்டம் தீட்டி அரங்கேற்றுகிறார். நீங்கள் எவ்வளவு வேடம் போட்டு எத்தனை நாடகங்களை அரங்கேற்றினாலும் நாட்டு மக்களிடம் எடுபடாது.

திமுகவினர் தேர்தல் வந்தால் மக்களை சந்திப்பார்கள். தேர்தல் முடிந்தால் மக்களை மறந்துவிடுவார்கள். ஆனால் எப்போதுமே தொடர்ந்து மக்களை பற்றி சிந்தித்து நன்மை செய்வது அதிமுக.

தமிழக ஆளுநரை சந்தித்து என் மீதும் தமிழக அமைச்சர்கள் மீதும் ஸ்டாலின் புகார் மனு கொடுத்தார். சாலைக்கு டெண்டர் விடவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. அதில் எப்படி ஊழல் செய்ய முடியும். பொய் தோற்றத்தை உருவாக்கி மக்களிடம் இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஸ்டாலின்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான். தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது திமுகவால்தான். பல ஊழல்களை செய்து ஊழலில் சாதனை படைத்தது திமுக.

திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. கோரப் பசியில் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் ஆளையே விழுங்கிவிடுவார்கள். கிராமத்தில் பிறந்து கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராக ஆகியுள்ளேன். கருணாநிதி முதல்வரராக இருந்ததால் அவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வராக ஆனார், கட்சி தலைவரானார்.

மக்கள் ஆதரவோடு, அதிமுக தொண்டர்கள் அரவணைப்போடு இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். திமுகவைப்போல் சர்வாதிகார கட்சி அதிமுக அல்ல. ஜனநாயகம் உள்ள இயக்கம் இது. இந்தக் கட்சியில்தான் உழைப்பவர்கள், தலைமைக்கு நேர்மையாக இருப்பவர்கள் எந்தப் பதவிக்கும் வர முடியும். அதற்கு நானே உதாரணம்.

திமுகவில் இது முடியுமா. அது குடும்பக் கட்சி. திமுகவில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதி மாறனைத் தவிர வேறு ஆளே கிடையாதா. திமுகவுக்காக பாடுபட்டு சிறை சென்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அவர்களையெல்லாம் பிரச்சாரத்துக்குவிட்டால் கட்சியைக் கைப்பற்றி விடுவார்கள், குடும்பத்தை விட்டு கட்சி போய்விடும் என்று பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இங்கு இருக்கும் ராமசாமி, சின்னசாமி, குப்புசாமி முதலமைச்சராக ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? இனி வருங்காலத்தில் ஒரு சாதாரண மனிதன்தான் தமிழகத்தில் முதலமைச்சராக வர வேண்டும். என்னைப்போல் ஆயிரக்ககணக்கானோர் இருக்கிறார்கள்.

அவர்கள்தான் நாட்டை ஆழ வேண்டும். கஷ்டமே தெரியாதவர்கள் முதலமைச்சராக வந்தால் எப்படி மக்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு திட்டங்களைத் தீட்ட முடியும்.

நான் விவசாயி. கிராமத்தில் இருந்து வந்தவன். மக்களோடு மக்களாக பழகியவன். வெயிலிலும், மழையிலும் நனைந்தவன். அதனால் வேளாண் பெருமக்கள், தொழிலாளிகள் படும் கஷ்டங்கள் தெரியும். கஷ்டப்படாமல் ஏசி அறையில் இருப்பவர்களுக்கு மக்களைப் பற்றி என்ன தெரியும்.

மக்களாகிய நீங்கள்தான் முதல்வர். நீங்கள் உத்தரவிடும் பணியைச் செய்பவன்தான் நான். ஸ்டானின் கனவெல்லாம் பகல் கனவாகத்தான் இருக்கும். அவரது ஆசைகள் எல்லாம் நிராசையாகத்தான் இருக்கும். எதுவுமே நடக்காது. அதிமுக அரசு தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு பயிர்க்கடனை ரத்து செய்தது அதிமுக அரசு. அதிமுககாரர்களுக்குத்தான் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பச்சைப் பொய்யை ஸ்டாலின் கூறுகிறார். கடன் தள்ளுபடியால் திமுகவினர்தான் அதிகமாக பயன் பெற்றுள்ளனர்.

இதற்கு ஒரே ஒரு உதாரணமாக திமுக முன்னாள் எம்பி அக்னிராஜ். இவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி ஆகியுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிகமாக கடன் பெற்றவர்கள் திமுகவினர். பயனடைந்த அத்தனை பேரும் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளனர். சிறுபான்மை மக்களை அரணாக பாதுகாத்தவர் ஜெயலலிதா. அதே வழியில் அதிமுக அரசு சிறுபான்மை மக்களை பாதுகாத்து வருகிறது.

கரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறியது, கரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் என இது தொடர்பாக தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடாக இ பாஸ் பெற்று பயன்படுத்தியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்கள் நலன் கருதி கைவிடப்படுகிறது. இந்த வழக்குகள் திரும்ப பெறப்படும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உருவபொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு என பல்வேறு போராட்டங்களில் சில அமைப்புகள் ஈடுபட்டன. இந்த போராட்டங்களின்போது காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து சட்டம், ஒழுங்கை பராமரித்தனர்.

போராட்டங்களின்போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது சொத்துகளுக்கு ஏற்படுத்துதல், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்றவற்றுக்காக சுமார் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்டது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.

இதேபோல், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்பகுதி மக்களின் கோரிக்கைளை பரிசீலித்து பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. சில வழக்குகள் முதல் தகவல் அறிக்கை நிலையில் உள்ளது. இந்த வழக்குகளை கைவிட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை கனிவோடு பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக அடுத்தடுத்து 3 ஆம்புலன்ஸ்கள் வந்தன. இதனால், முதல்வரின் பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்கள் செல்ல வழி விட்டு ஒதுங்கி நிற்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆம்புலன்ஸ்கள் கடந்து சென்ற பின் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x