Published : 19 Feb 2021 04:37 PM
Last Updated : 19 Feb 2021 04:37 PM

சிஏஏ, கரோனா வழக்குகள் வாபஸ்; திமுகவின் கோரிக்கையை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு: ஸ்டாலின்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கூடங்குளம், சிஏஏ போராட்டம் மற்றும் கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வெற்று அறிவிப்பாக இல்லாமல் அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கூடங்குளம், சிஏஏ போராட்டம் மற்றும் கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 19) அறிவித்தார்.

இது தொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களைப் பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டுத் துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைக் கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்த போதும், அலட்சியம் காட்டிய அதிமுக அரசின் முதல்வர் பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார்.

சிஏஏவை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவது குறித்து சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.

முதல்வரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், திமுக முன் வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்!".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x