Published : 19 Feb 2021 01:39 PM
Last Updated : 19 Feb 2021 01:39 PM
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் எனவும், அடுத்து ஆட்சி அமைக்க கோருவது தொடர்பாக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று (பிப். 19) சந்தித்த மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறுகையில், "வருகிற 25-ம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அதிருப்தியால் மேலும் 3 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்பதவியிலிருந்து விலக தயாராக உள்ளனர். பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிவுக்கு அக்கட்சியினரேதான் காரணம். நாராயணசாமியின் ஆட்சி 'ஒன் மேன்' ஆட்சியாக உள்ளதால் நாராயணசாமி பதவி விலக வேண்டும் என்பது தான் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் விருப்பமாக உள்ளது.
புதுச்சேரி வரலாற்றின் கடைசி காங்கிரஸ் முதல்வராக நாராயணசாமி இருப்பார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம். அதன்பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும்" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில் "பொதுமக்கள் கூறிய புகாரை தவறாக மொழிப்பெயர்த்து தங்களது கட்சி தலைவரை பொதுமக்கள் மத்தியில் 'முட்டாள்' ஆக்க நினைத்தவர் தான் நாராயணசாமி. தற்போது மக்களையும் 'முட்டாள்' ஆக்கி வருகிறார்.
நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதல்வர் எதிர்க்கிறாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் கட்சி சார்ந்தவர்களையே நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னுடைய கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை தக்கவைத்து கொள்ள திறமையில்லாத முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சியினர் மீது குறை சொல்லி வருகிறார். பல மாநிலங்களில் 356 சட்ட விதிமுறையை பின்பற்றி காங்கிரஸ் தான் ஆட்சியை கலைத்துள்ளது. பாஜக செய்ததில்லை" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT