Published : 19 Feb 2021 12:51 PM
Last Updated : 19 Feb 2021 12:51 PM
ஒரே நாளில் ஒரே நிறுவனத்தின் இரு பதவிகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து தான் எழுதிய கடிதத்தை பரிசீலித்த வங்கி ஊழியர் தேர்வுக் கழகம் மீண்டும் பழைய நிலையே தொடரும் என பதிலளித்துள்ளது, தேர்வெழுதும் பலருக்கு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அலுவலக செய்திக்குறிப்பு வருமாறு:
ஒரே நாளில் ஒரே நிறுவனத்தின் இரு பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்துவதை மாற்ற வேண்டுமென்று சு. வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கோரிக்கையை உள் ஆய்வுக் குழு ஒன்று பரிசீலித்ததாகவும், அதே தேதிகளைத் தொடர்வதாகவும் வங்கி ஊழியர் தேர்வுக் கழகம் (ஐ.பி.பி.எஸ்) பிப்ரவரி 16, 2021 தேதியிட்ட கடிதம் மூலம் பதில் அளித்துள்ளது.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி மீண்டும் ஐ.பி.பி.எஸ் க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:
உள் ஆய்வு எதற்காக?
"உங்கள் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. நீங்கள் அளித்த உள் ஆய்வுக் குழு இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்கவுள்ள தேர்வர்களின் சிரமங்களை மறுக்கவில்லை. தேர்வர்கள் தங்களின் சிரமங்களை உங்களுக்கே தெரிவித்துள்ளதையும் உங்கள் கடிதமே ஏற்றுக் கொண்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கக் கூடுமென்பதால் அந்த தேதியை நீங்கள் மாற்றி இருக்கலாம்.
மேலும் இரு தேர்வுகளுமே ஒரே தொழில் சார்ந்தவை. முடிவெடுத்தலும் ஒரே கூரையின் கீழ் இருக்கிறது. இருப்பினும் தேர்வர்கள் ஏதாவது ஒரு வாய்ப்பை நழுவ விடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அந்த தேர்வர்களில் சிலருக்கு வாழ் நாள் வாய்ப்பை இழக்கச் செய்வதாகக் கூட அமைந்து விடக் கூடும்.
கால அவகாசம் உங்களுக்கு குறைவாக இப்போது இருப்பினும், உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். பிரிவு 1 அதிகாரிகள் பதவிக்கான நேர்காணலை சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிறிதொரு தேதியில் நடத்துங்கள். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்."
என்று வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
"முதலில் செய்த நிர்வாகத் தவறை நியாயப்படுத்துவதற்காகவே இம் முடிவை மாற்ற மறுக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இது தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். நிறைய எண்ணிக்கையில் எழுதும் அலுவலக உதவியாளர் பதவிக்கான தேர்வை மாற்ற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் உள்ள அதிகாரிகள் பதவிக்கான நேர்காணலை மாற்றலாமே.
ஒவ்வொருவர் வாழ்க்கையும், அவர்களுக்கான வாய்ப்பும் முக்கியம். உள் ஆய்வுக் குழுவும் தேர்வர்களுக்கு உள்ள பிரச்சினையை மறுக்காத போது முடிவு மட்டும் இப்படி அமைந்தது ஏன்? " அறுவை சிகிச்சை வெற்றி... நோயாளி காலி" என்பது போல இருக்கிறது. தேதியை மாற்றுவதே தேர்வர்களுக்கு வழங்கப்படும் நீதி" என்று வேண்டுகோள் வைத்துள்ளார்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT