Published : 19 Feb 2021 12:13 PM
Last Updated : 19 Feb 2021 12:13 PM
வங்கிக் கடனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்துவதற்குச் சாதகமாகச் செயல்பட ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட தனியார் வங்கியின் உயர் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையுங்களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன். இவர் பிரபல தனியார் வங்கியின் சென்னை கிளை ஒன்றில் (standard chartered bank) தனது சொந்தத் தேவைக்காகக் கடன் வாங்கியுள்ளார். அசல் மற்றும் வட்டியைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த அவர் கடன் தொகையில் இருந்து ஒரே தவணையாகத் தன்னால் இயன்ற கடனைத் திருப்பிச் செலுத்த வங்கி தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தார்.
தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரனுக்குச் சாதகமாக முடித்துத் தந்து ஒரே நேரத்தில் அவரால் இயன்ற தொகையைச் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக ராஜாஜி சாலையில் உள்ள வங்கியின் சொத்து தாவா பிரிவின் சிறப்பு அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்தார். அவ்வாறு தள்ளுபடி செய்து குறிப்பிட்ட தொகையைப் பெற ரூ.3 லட்சம் லஞ்சமாக வழங்க வேண்டும் என ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரனிடம் கேட்டுள்ளார்.
ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன், லஞ்சம் கேட்கும் விவகாரம் குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கி அதிகாரி ராஜேந்திரனைப் பொறி வைத்துப் பிடிக்க சிபிஐ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திட்டமிட்டனர். ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன் லஞ்சப் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொள்வதுபோல் வங்கி அதிகாரி ராஜேந்திரனிடம் பேசச்சொல்லி பணம் எங்கு, எந்த இடத்தில், எந்த நேரத்தில் தருவது என்பதையும் கேட்டுப் பதிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன் லஞ்சப் பணம் ரூ.3 லட்சத்தை கோயம்பேட்டில் உள்ள தனியார் கிளப்பில் கொண்டுவந்து தரும்படி நாள், நேரம் உள்ளிட்டவற்றை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரனிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூ.3 லட்சத்தை சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்து ராஜேந்திரன் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
லஞ்சத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு நேற்று மாலை கோயம்பேட்டில் உள்ள தனியார் கிளப்பில் ராஜேந்திரன் வந்தார். அவரைப் பிடிக்க சிபிஐ அதிகாரிகள் மறைந்திருந்தனர். ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரனிடம் லஞ்சப் பணத்தைப் பெறும்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். லஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி ராஜேந்திரனை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து ராஜேந்திரன் செயல்பாடுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜேந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை இடவும் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT