Published : 19 Feb 2021 10:34 AM
Last Updated : 19 Feb 2021 10:34 AM
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் உறைய வைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அதைப் பற்றிக் கவலைப்படவில்லை பிரதமர் மோடி. அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றார். அதானிக்காக, அம்பானிக்காக ஆட்சி நடக்கின்றது என வைகோ விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
“எத்தனையோ அடக்குமுறையை எதிர்கொண்டவர்கள், பொதுவுடைமைத் தோழர்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய இரண்டாவது மாநாடு, 1948ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் நடைபெற்றது. மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் இந்த மாமதுரைதான். இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், இந்தியா முழுமையும் இருந்து 299 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
1953 டிசம்பர் 27 முதல் 1954 ஜனவரி 4 வரை ஒன்பது நாட்கள் நடைபெற்றது. எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். ஜோதிபாசு தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட மேலாண்மைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பி.ராமமூர்த்தி, அஜாய் கோஷ், சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி பங்கேற்றனர். தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் லட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.
அதேபோலத்தான், இன்றைக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது. இங்கே தீர்மானங்களை வாசித்தார்கள். அதில் ஒரேயொரு தீர்மானத்தில் மட்டும், 500 திருத்தங்கள் செய்ததாகச் சொன்னார்கள். அந்த அளவுக்கு, கொள்கைத் தெளிவுமிக்க தோழர்கள், பொதுவுடைமைக் கொள்கைகளில் ஊறித் திளைத்து இருக்கின்றார்கள்; கருத்துரிமைக்கு மதிப்பு அளிக்கின்றார்கள் என்பதைத்தான் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனையோ அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள் நீங்கள். சிறையில் இருந்தவாறே தோழர் பி.இராமமூர்த்தி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.டி.கே. தங்கமணி, ஜானகி அம்மையார் போல, கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பாடுபட்டவர்கள் ஏராளம். அன்றைக்கு இருந்தது போன்ற அடக்குமுறை, இன்றைக்கு மீண்டும் தலைதூக்கிவிட்டது. எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் அதைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
சிந்தனையாளர்களான, 80 வயது கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத மாற்றுத்திறனாளி பேராசிரியர் சாய் பாபா, மனித உரிமைச் செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரைக் கைது செய்து, இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைத்துள்ளனர். கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக்கொன்று விட்டார்கள்.
ஈவு இரக்கம் அற்ற, மனசாட்சி அற்ற ஒரு அரசை நரேந்திர மோடி நடத்திக்கொண்டு இருக்கின்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய 52 பேர் பலியாகி இருக்கின்றார்கள். அதைப் போல, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, லட்சக்கணக்கான விவசாயிகள், உறையவைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்களே, அதைப் பற்றிக் கவலைப்பட்டாரா நரேந்திர மோடி? இல்லை. அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றார். அதானிக்காக, அம்பானிக்காக ஆட்சி நடக்கின்றது.
விமான நிலையங்களைத் தனியாரிடம் கொடுக்கின்றார்கள்; ரயில்வேயைக் கொடுக்கின்றார்கள், பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தையும், தனியாரிடம் விற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்துவிட்டார். அத்தகைய நரேந்திர மோடிக்கு நடைபாவாடை விரிக்கின்ற, அடிவருடி அரசியலைத்தான், எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டு இருக்கின்றார்.
காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்றார் எடப்பாடி. அதை ரசாயன மண்டலமாக அறிவித்து, அங்கே பல திட்டங்களுக்கு, நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகின்றார். நீட் தேர்வுக் கொடுமையால், 13 உயிர்கள் பலியாகின. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றார்கள். அவர்கள் சிந்திய செங்குருதிக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லியாக வேண்டும். லஞ்சம் ஊழலில் ஊறித் திளைக்கின்ற அதிமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும்”.
இவ்வாறு வைகோ பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT