Published : 19 Feb 2021 09:36 AM
Last Updated : 19 Feb 2021 09:36 AM

விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பிரதமர் அவ்வையாரின் பாட்டை சொல்லலாமா? - ஸ்டாலின் கேள்வி

சென்னை

மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை உயர்கிறது! காய்கறி விலை உயர்கிறது! விலைவாசி உயர்கிறது! போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. ஏழைகளின் வாழ்க்கைத்தரம் மட்டும் உயரவில்லை. இவை சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல்கள் என ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

நேற்று மாலை, திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை வண்டியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று நிறைவுரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“தமிழ்நாட்டு மக்களுக்கு பாரதியார் பாட்டைச் சொன்னால் போதும் - அவ்வையார் பாட்டைச் சொன்னால் போதும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.

“வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயிர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான்”

என்று அவ்வை மூதாட்டி பாடிய பாடலின் பொருள் என்ன என்றால், ஒரு மன்னனின் உயர்வு எதில் அடங்கி இருக்கிறது என்றால் நிலம் செழிப்பதில் தான் அடங்கி இருக்கிறது என்றார் அவ்வை பாட்டி.

ஆனால் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அவர்கள், அவ்வையாரின் பாட்டைச் சொல்லலாமா? அதற்கான உண்மையான அர்த்தத்தில் ஆட்சி நடத்துகிறீர்களா? அதேபோல் மீனவர்களுக்காகவும் உருக்கமாக பேசி இருக்கிறார் பிரதமர்.

“நமது மீனவர்கள் நீண்ட காலப் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதி அளிக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தான் நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டார்கள். இதனை பிரதமரால் தடுக்க முடியவில்லை.

பிரதமர் ஆவதற்கு முன்னால் 2014-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக ராமநாதபுரம் வந்த நரேந்திர மோடி, ''நான் குஜராத்தை சேர்ந்தவன். குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. நான் பிரதமர் ஆனதும் குஜராத் மீனவர்களும் தமிழக மீனவர்களும் இணைந்து இதற்காக நிரந்தர தீர்வை எட்டுவதற்கான கூட்டு நடவடிக்கையை எடுப்பேன்" என்று சொன்னார். ஆனால் ஆண்டு தோறும் மீனவர் மீதான தாக்குதல் தொடர்கிறது.

இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசிய போது, மாநிலங்களவை அவைத்தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்யா நாயுடு ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

“இது நீண்ட கால பிரச்னையாக உள்ளது. இதுவரை இதற்கு தீர்வு காணமுடியவில்லை. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். மீனவர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று அவருக்கே தெரிகிறது. ஆனால் மீனவர்கள் நிம்மதியாக வாழ்வதைப் போல பிரதமர் பேசுகிறார்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வேறொரு நாடு. ஆனால் மோடி ஆட்சி காலத்தில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதலை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது.

பெட்ரோல் விலை உயர்கிறது. டீசல் விலை உயர்வு. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு. இதுதான் இந்த நாட்டுக்கு மோடி தொடர்ந்து கொடுக்கும் பரிசாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தியது மோடி அரசு.

இப்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் 52 ரூபாய் உயர்த்தி விட்டார்கள். தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை உயர்கிறது! பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறி விலை உயர்கிறது! விலைவாசி உயர்கிறது! போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. ஏழைகளின் வாழ்க்கைத்தரம் மட்டும் உயரவில்லை. இவை சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல்கள். இதனை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

இதை எல்லாம் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது. தட்டிக் கேட்கக் கூட வேண்டாம்! அனைத்தையும் தூக்கி தாரைவார்க்கும் ஆட்சியாக பழனிசாமியின் ஆட்சி இருக்கிறது. கொஞ்சம் தாமதித்து இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தையே தாரை வார்த்திருப்பார்கள்.

கல்வி - வேளாண்மை - மின்சாரம் ஆகிய துறைகளில் இருந்த மாநில உரிமைகளை தாரைவார்த்து விட்டார்கள். தமிழைப் புறக்கணித்து இந்தித் திணிப்புக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்.

தமிழகத்தின் நிதித் தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்வது இல்லை. கேட்டநிதியை தருவது இல்லை. புதிய திட்டங்கள் கிடையாது. அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மோடி அரசு மனது வைத்தால்தான் வரும், ஜப்பான் அரசு மனது வைத்தால் தான் வரும் என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

பழனிசாமி அரசாங்கத்தை, ஒரு அரசாங்கமாகவே மத்திய பாஜக மதிக்கவில்லை. இந்த நிலையில் நடக்க இருக்கும் தேர்தல் தமிழகத்தின் நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் முக்கியமான தேர்தல்.

அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்றப் பார்க்கிறது. அதிமுகவை பயமுறுத்தி பாஜக தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. பாஜகவுக்கும்- அதிமுகவுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் தான் இந்தத் தேர்தல்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x