Published : 19 Feb 2021 08:17 AM
Last Updated : 19 Feb 2021 08:17 AM
பொதுத்துறையை முற்றிலுமாக ஒழிக்க நினைக்கிறார் மோடி என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.
மதுரையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
காலமெல்லாம் உழைத்து ஊருக்குக் கொடுத்துவிட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளவர்களுக்காக உழைக்கும் இயக்கம் இந்த இயக்கம். இந்திய அரசியலில் பல சித்தாந்தங்கள் வேறுபாடுகள் வந்தபோதும் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டியிருக்கிறது. சமூக நீதிக்கு வழிகாட்டியிருக்கிறது.
தேச நலனுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருப்பது பாஜக. அவரகளது பொருளாதார, சமூக கொள்கை, இந்தியாவை கூறுபோடும், விற்பனை செய்யும் கொள்கையாக, வீழ்த்தும் கொள்கையாக உள்ளது.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100க்கு விற்கிறது. நாட்டை முன்னேற்றுவதாக மோடி அரசாங்கம் போலிப் பிரச்சாரம் செய்துவருகிறது. இதனை தோலுரித்துக் காட்ட வேண்டும்.
மோடியின் கலாச்சார அமைச்சகம், இந்தியாவின் 12 ஆயிரம் கால வரலாற்றை திருத்தி எழுதுவதாக அந்த அமைச்சகம் சொல்லியிருக்கிறது. வரலாற்றை எழுதும் குழுவில் வடகிழக்கு, தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை.
இவர்கள் இல்லாமல் இந்தியாவின் வரலாற்றை எழுதிவிட முடியுமா? இந்திய வரலாற்றினை வருங்கால சமுதாயம் வேறு ஒரு பார்வையில் பார்க்க வேண்டும். உண்மை தெரியாமல் பொய்யான முகத்தைப் பார்க்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது.
உலகத்தில் தாராளமயமாக்கல் வந்திருக்கிறது. அதன் சாதக, பாதக ம்சங்அகளைப் பார்க்க வேண்டும். பொதுவுடைமை சீனா பல முன்னேற்றங்களை கண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் கொள்களையைப் பின்பற்றி சீனா வெற்றி பெற்றிருக்கிறது. தாராளமயமாக்கலுக்கு சீனாவின் வழியைக் காட்டினால் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நரசிம்மராவ், மன்மோகன்சிங் தாராளமயமாக்கலுக்கு இந்திய முகத்தைக் கொடுத்தார். அதனால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இன்று பாஜக அரசில் பொதுத்துறையின் நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இந்திய முகத்தை எடுத்துவிட்டு அமெரிக்க முகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதனால் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
மோடி அரசு பொதுத்துறையை முற்றிலுமாக ஒழிக்க நினைக்கிறது. தனியார் துறையிலும் அவர் கொள்கையை மேற்கொள்ளவில்லை.
இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் ஜியோ எனும் ஒற்றைத் தொலைதொடர்பு கொணடு வந்திருக்கிறார். எல்ஐசி, ரயில்வே, பாரத் 2022க்குள் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளார்.
ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இருந்தபோது இக்கட்டான காலகட்டம்போல் பாஜக ஆட்சியின் காலகட்டம் உள்ளது. பாஜக தேச அபிமானிகள் கிடையாது. அவர்கள் தேச விரோதிகள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள்.
கம்யூனிஸ்ட் இயக்கம் தியாகம் செய்து பழக்கப்பட்ட இயக்கம். காலமெல்லாம் சிறையிலிருந்த இயக்கம் பொதுவுடைமை இயக்கம். மதிக்கப்படவேண்டிய அரசியல் இயக்கம்.
இந்தத் தேசம் வீழ்ச்சியை சந்திக்கும்போது தடுக்கும் வகையில் எழும் இயக்கம். பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும். அது மாய வளர்ச்சி. அக்கட்சியின் போலி முகத்தைத் தோலுரித்துக்காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT