Published : 19 Feb 2021 03:25 AM
Last Updated : 19 Feb 2021 03:25 AM

மணல் கடத்தலை தடுத்தபோது டிராக்டர் ஏற்றி தலைமை காவலரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலம் கல்லாற்றில் கடந்த 2014-ம் ஆண்டு மணல் கடத்தலை தடுக்கச் சென்ற தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் கல்லாற்றில் மணல் கடத்தல் தொடர்பான புகார்கள் அடிக்கடி வரப்பெற்றன. அதன்பேரில் தக்கோலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், தலைமைக் காவலர் கனகராஜ் (40) ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி அதிகாலை 6 மணியளவில் ரோந்துப் பணிக்காக சென்றனர்.

அப்போது, கல்லாற்றில் சிலர் டிராக்டர்களில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர். காவல் துறையினர் வருவதைப் பார்த்ததும் டிராக்டர்களில் இருந்தவர்கள் தப்பியோடினர்.

இதில், தக்கோலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (31) மற்றும் அவரது சகோதரர் சதீஷ் ஆகியோர் ஓட்டி வந்த டிராக்டரை மட்டும் காவலர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற சுரேஷ் டிராக்டரை வேகமாக இயக்கி கனகராஜ் மீது மோதினார்.

இதில், நிலைதடுமாறி விழுந்த கனகராஜ் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சகோதரர்கள் இருவரும் டிராக்டருடன் தப்பியோடி விட்டனர். உயிர் தப்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் அளித்த தகவலின்பேரில், தக்கோலம் காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று கனகராஜின் உடலை மீட்டு விசாரணை செய் தனர்.

தலைமறைவாக இருந்த சுரேஷ், அவரது சகோதரர் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

ரூ.7 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் நடந்து வந்தது. இறுதியில், அவர் நேற்று அளித்த தீர்ப்பில் தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த சுரேஷ்-க்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். சுரேஷின் சகோதரர் சதீஷ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் எல்.ரவிக்குமார் ஆஜராகினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x