Published : 18 Feb 2021 08:54 PM
Last Updated : 18 Feb 2021 08:54 PM
போடி புதிய பேருந்து நிலைய கடைக்கு கரோனாவால் மூடப்பட்டிருந்த மாதங்களுக்கும் வாடகை செலுத்தக்கோரி நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸூக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேனி போடியைச் சேர்ந்த எம்.ஸ்ரீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
போடிநாயக்கனூர் புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வருகிறேன். இந்த கடைக்கு நகராட்சிக்கு மாதம் ரூ.11800 வாடகை செலுத்தப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக கடை கடந்தாண்டு மார்ச் 25-ம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 3 வரை கடை மூடப்பட்டது.
இந்நிலையில் எனது டீ கடைக்கான 1.12.2019 முதல் 31.3.2021 வரையிலான வாடகை பாக்கி ரூ.1,88,800-யை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி ஆணையர் 30.12.2020-ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதம் கடை அடைக்கப்பட்டது.
அந்த மாதங்களுக்கும் வாடகை கேட்பது சட்டவிரோதம். வாடகையை பாக்கியை கட்டாவிட்டால் கடையை மூடுவதாக நகராட்சி ஊழியர்கள் மிரட்டி வருகின்றனர்.
கடைகள் அடைக்கப்பட்டிருந்த மாதங்களுக்கான வாடகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். எனவே, கடை வாடகை பாக்கி தொடர்பாக நகராட்சி ஆணையர் அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்து, டீ கடையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பார்த்தீபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நீலமேகம், முகமது ரஸ்வி வாதிட்டனர். பினனர் போடி பேருந்து நிலைய கடைக்கு வாடகை பாக்கி கேட்டு நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து, அடுத்த விசாரணையை மார்ச் 25-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT