Published : 18 Feb 2021 07:30 PM
Last Updated : 18 Feb 2021 07:30 PM
டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று (பிப்.18) நடைபெற்றது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு, 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் மத்திய அரசின் முடிவு போன்றவை குறித்து விரிவாக ஆலோசனை செய்தனர்.
இதுகுறித்து தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறியதாவது:
"இந்தியாவில் 18 மாநிலங்களைவிட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு என்பது சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். லாரி உரிமையாளர்கள் வாழ்வா, சாவா என்று வாழ்ந்துகொண்டு வரும் வேளையில், டீசல் விலை தினந்தோறும் கடுமையாக உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. டீசல் விலையைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு 'வாட்' வரியைக் குறைக்க வேண்டும்.
15 ஆண்டுகள் ஆன வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால், தென் மாநிலங்களில் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும். பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.
'ஃபாஸ்டேக்' முறையினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் தனியாகப் பணம் செலுத்திட ஏதுவாக ஒரு வழியைக் கொடுக்க வேண்டும்.
எங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேச வேண்டும். கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மார்ச் 15-ம் தேதி, பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், தென்மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வோம்.
மத்திய அரசு டீசல் விலையையும், மாநில அரசு 'வாட்' வரியையும் 15 நாட்களுக்குள் குறைக்க வேண்டும். கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 26-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளோம்.
மத்திய அரசின் புதிய அறிவிப்பான 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் முயற்சியைக் கைவிடாவிட்டால் பல லட்சம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'மாற்று வழிக்குச் செல்லுங்கள்' என்று கூறியுள்ள நிலையில், அவர் எத்தனால், கேஸ் ஆகிய மாற்று எரிசக்தியைப் பயன்படுத்திட அறிவித்தால் லாரி உரிமையாளர்கள் பின்பற்றத் தயாராக உள்ளோம்".
இவ்வாறு சண்முகப்பா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT