Last Updated : 18 Feb, 2021 07:15 PM

4  

Published : 18 Feb 2021 07:15 PM
Last Updated : 18 Feb 2021 07:15 PM

ஆட்சிக்கு வரலாம் என்ற ஸ்டாலினின் பகல் கனவு நிறைவேறாது: முதல்வர் பழனிசாமி

தென்காசி

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, “அதிமுக அரசின் திட்டங்களை தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அதிமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

திமுகவினர் தில்லுமுல்லு செய்வதில் கைதேர்ந்தவர்கள். அதை முறியடிக்கும் வகையில் இளைஞர் பாசறையினர் பணியாற்ற வேண்டும்” என்றார்.

பின்னர், பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரg கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் முதல்வராக பதவியேற்றபோது, ஒரு மாதத்தில் இந்த ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கூறினார்.

ஆனால், மக்கள் துணையோடு இந்த ஆட்சி 5வது ஆண்டு காலத்தில் அடியெடுத்து வைத்தது. இந்த ஆட்சியை கவிழ்க்க எத்தனையோ சதி செய்தார்கள்.

அத்தனை சதிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவை உடைக்க செய்த அத்தனை முயற்சிகளும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகிவிடலாம் என ஸ்டானின் பகல் கனவு கண்டு குறுக்கு வழியில் எத்தனையோ திட்டங்களை போட்டார்.

அந்தத் திட்டங்களெல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. நேர்மையான வழியில் ஆட்சிக்கு வர முடியாமல் குறுக்கு வழியில் வர நினைத்தால் எதிர்க்கட்சி வரிசையில்கூட உங்களுக்கு இடம் கிடைக்காது.

சட்டப்பேரவையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, திமுகவினர் குழாய்ச் சண்டை போடுவதுபோல் நடந்துகொண்டார்கள். இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா?.

நான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. நாட்டுக்கு உணவளிப்பவர் விவசாயி. விவசாயத்தை மதிக்காத ஸ்டாலினுக்கு விவசாயிகள் இந்த தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம். வரும் தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். விஞ்ஞான முறைப்படி மக்கள் பிரச்சினைகளை அதிமுக தீர்த்து வருகிறது.

தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றியது. ஒரே ஆண்டில் 6 மாவட்டங்களை உருவாக்கினோம். மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. தென்காசி மாவட்ட விவசாயிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் ஜம்புநதி, ராமநதி இணைப்புக் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். இரட்டை குளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் அமைக்கும் பணி விரைவில் நடைபெறும். தென்காசி தொகுதியில் 3861 விவசாயிகளுக்கு 91 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே நுண்ணீர் பாசன திட்டத்தில் அதிக நிதி பெற்றுத் தந்தது தமிழகம்தான். உணவு தானிய உற்பத்தில் தொடர்ந்து தமிழகம் விருது பெற்று வருகிறது. வேளாண் பணி சிறக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.

வீடற்ற ஏழை தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். நகரங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். இந்த ஆண்டு 2.50 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சிறப்பான குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் நிறைந்துள்ளன.
திமுகவினர் பதவியில் இருக்கும்போது மக்களை மறந்துவிடுவார்கள்.

தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைப்பார்கள். மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வர ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. இப்போது ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று மனு வாங்குகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் மக்களை சந்தித்து வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?.

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது. மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்க பார்க்கிறீர்கள். தர்மம், நேர்மை, உண்மைதான் வெல்லும்” என்றார்.

இதைத் தொடர்ந்து தென்காசியில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடினார். இன்று காலை கடையநல்லூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து, புளியங்குடியில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர், சங்கரன்கோவிலில் நடைபெறும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று பேசுகிறார்.

சாலையோர கடையில் டீ குடித்த முதல்வர்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்துக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு செல்லும் வழியில் மகிழ்வண்ணநாதபுரத்தில் சாலையோரத்தில் உள்ள ஒரு கடையில் அமர்ந்து முதல்வர் பழனிசாமி டீ குடித்தார்.

அமைச்சர்கள் வி.எம்.ராஜலெட்சுமி, ஆர்.பி..உதயகுமார், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x