Published : 18 Feb 2021 04:42 PM
Last Updated : 18 Feb 2021 04:42 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தவருக்கு 3 தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
குஜராத் மாநிலம் நம்பர் 1 அம்பிகா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் டானிஷ் படேல் (34). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் அருகே உள்ள ஒரு தனியார் குவாரியில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2019 டிசம்பரில் வாய் பேச முடியாத, மூளை வளர்ச்சி குன்றிய 17 வயதுடைய ஒரு சிறுவனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக டானிஷ் படேல் துன்புறுத்தி உள்ளார்.
இதில், பாதிக்கப்பட்ட அச்சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 18 நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டானிஷ் படேலை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி ஆர்.சத்யா இன்று (பிப். 18) தீர்ப்பை அளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட டானிஷ் படேலுக்கு போக்ஸோ சட்டத்தின் 3 பிரிவுகளுக்கு தலா ஒரு தூக்கு என மூன்று தூக்கு தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்கு (302) ஒரு ஆயுள் தண்டனையும், சிறுவனை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற குற்றத்துக்கு (363) 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் அங்கவி வாதாடினார்.
மேலும், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கீரனூர் மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா, நீதிமன்ற காவலர் கலைவாணி ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.
"ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு அளிக்கப்பட்ட 3 தூக்கு தண்டனை, நாடெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கும்" என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT