Published : 18 Feb 2021 04:20 PM
Last Updated : 18 Feb 2021 04:20 PM
நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்று திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, மேலச்செவல் பகுதிகளில் முதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களுக்கு வாரிசு கிடையாது. தமிழக மக்கள்தான் அவர்களின் வாரிசு. அவர்களது வழியில் இன்றும் அதிமுக ஆட்சியை நடத்துகிறோம்.
ஆனால் அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார். ஆனால் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. ஏராளமான விருதுகளையும் இதற்காக பெற்று வருகிறோம். அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளை திறந்து அதன் மூலம் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்.
நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நாங்கள் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். 2.94 லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக விருதுகளை பெற்று வருகிறோம்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றுகிறது. நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா. தி.மு.கவை கண்டாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்தினார்கள். நாட்டு மக்களை பார்க்காமல் அவர்களது வீட்டுமக்களை முன்னேற்ற செயல்பட்டனர். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் முதலாளி ஸ்டாலின். கனிமொழி உள்ளிட்டவர்கள் அதன் டைரக்டர்கள்.
இப்போது அக் கட்சியில் புதிதாக உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார். அவருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. என்னுடைய அனுபவம்தான் அவரது வயது. ஆனால் அதிமுக அரசை செல்லும் இடங்களில் எல்லாம் அவர் குறைகூறி வருகிறார். கருணாநிதியின் பேரன் என்ற தகுதியை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். மக்களின் கஷ்டங்களை தெரியாதவர் ஸ்டாலின். அவர்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மக்களின் கஷ்டங்களை உணர்ந்து திட்டங்களை நாங்கள் செயல்படுத்துகிறோம். 1100 எண்ணுக்கு செல்போன் மூலம் மக்கள்குறைகளை தெரிவிக்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்து செயல்படுத்தியிருக்கிறோம்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் திமுக தலைவர் மனுக்களை வாங்கி மக்களை ஏமாற்றி நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார். கடந்த மக்களவை தேர்தலின்போது அவர் வாங்கிய மனுக்கள் எங்கேபோனது என்று தெரியவில்லை.
சிறுபான்மையினர் மீது அதிமுக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்ல ரூ.20 ஆயிரம் வழங்கி வந்ததை ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறோம். கிறித்தவ தேவாலயங்களை புதுப்பிக்க வழங்கப்பட்ட நிதியை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தியிருக்கிறோம்.
திமுகவினரின் பொய்ப் பிரச்சாரத்தை அதிமுக ஐடி பிரிவினர் முறியடிக்க வேண்டும். இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் வீடுவீடாக சென்று அரசின் சாதனைகளையும், திமுகவின் பொய் பிரச்சாரத்தையும் எடுத்துக்கூறி அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார்.
மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஐ.எஸ். இன்பதுரை, நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT