Published : 18 Feb 2021 04:03 PM
Last Updated : 18 Feb 2021 04:03 PM
திமுகவின் 11-வது மாநில மாநாடு வரும் மார்ச் 14-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (பிப். 18) காலை, தேனி மாவட்டம், கம்பம் - உத்தமபாளையம் பேரூர், கோகிலாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற்ற, தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:
"தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை எட்டுவதற்கான பயணத்தில் திமுகவின் 11-வது மாநில மாநாட்டை வரும் மார்ச் 14 ஆம் தேதி தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் நடத்தவிருக்கிறோம் என்ற அறிவிப்பை இந்தத் தேனிக் கூட்டத்தின் வாயிலாக அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்.
திமுகவின் 2 ஆவது மாநில மாநாடு 1956-ம் ஆண்டும், 6 ஆவது மாநில மாநாடு 1990-ம் ஆண்டும், 8 ஆவது மாநில மாநாடு 1996-ம் ஆண்டும், 9 ஆவது மாநில மாநாடு 2006-ம் ஆண்டும், 10 ஆவது மாநில மாநாடு 2014-ம் ஆண்டும் நடைபெற்ற இடமும் தீரர்களின் கோட்டமாம் திருச்சி தான். அங்கேதான் திமுகவின் 11 ஆவது மாநில மாநாடு வருகிற மார்ச் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. வெற்றி கோட்டையை கைப்பற்ற திருச்சியிலிருந்து வெற்றி வியூகங்கள் தீட்டப்படும்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT