Last Updated : 18 Feb, 2021 03:00 PM

2  

Published : 18 Feb 2021 03:00 PM
Last Updated : 18 Feb 2021 03:00 PM

டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து திரும்பிய புதுச்சேரி பாஜக தலைவர்கள்; நாராயணசாமி அரசு தப்புமா?

அமித் ஷா-வை சந்தித்த புதுச்சேரி பாஜக தலைவர்கள்.

புதுச்சேரி

டெல்லிக்கு அவசரமாக சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து விட்டு பாஜக தலைவர்கள் இன்று புதுச்சேரி திரும்பியுள்ளனர். பெரும்பான்மை இல்லாத நாராயணசாமி அரசு தப்புமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் புதுவை சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 10 ஆகவும், அரசை ஆதரிக்கும் திமுக 3, சுயேச்சை ஒருவர் என 14 எம்எல்ஏக்கள் பலம் மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பா.ஜனதா 3 என 14 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. சபாநாயகருடன் சேர்த்து ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சம பலம் உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்கள் 28 பேர் உள்ளனர். இதில், 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால்தான் 'மெஜாரிட்டி' கிடைக்கும். ஆளும் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

நாராயணசாமி தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதோடு, ஆளுநர் மாளிகையில், நாராயணசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மனுவும் அளித்துள்ளனர். இந்த மனு மீது புதிதாக பதவியேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை (பொறுப்பு) சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் 2 பேர் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கையெழுத்திட்டு ஆளுநர் மாளிகையில் மனு கொடுத்துள்ளனர். உச்ச நீதிமன்றம் நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை உள்ளது என தீர்ப்பில் கூறியுள்ளது. இதனால் நாராயணசாமி அரசு தப்புமா என கேள்வி பலமாக எழுந்துள்ளது.

விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் டெல்லிக்கு வர நேற்று (பிப். 17) திடீர் அழைப்பு வந்தது. அவர்கள் நேற்று உடனடியாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்தனர். அப்பயணத்தை முடித்துவிட்டு இன்று (பிப். 18) புதுச்சேரி திரும்பினர்.

திடீர் அவசர பயணம் பற்றி மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி அரசியல் சூழல் பற்றி பேசினோம். முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரியில் நிலவும் அசாதாரணமான சூழலுக்கு ஏற்பட அரசியல் வியூகம் வகுக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் அளித்த மனு மீது துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, மேலும் விசாரித்தபோது, "குறிப்பிட்ட காலக்கெடு அளித்து சட்டப்பேரவையைக்கூட்டி அதில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட உள்ளார். இதன்பின், சபாநாயகர் சட்டப்பேரவை கூடும் தேதி, நேரத்தையும் முடிவு செய்து அறிவிப்பார்" என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x