Published : 18 Feb 2021 12:15 PM
Last Updated : 18 Feb 2021 12:15 PM
தமிழில் உறுதி மொழி வாசித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை இன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு பொறுப்பேற்றார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 16) இரவு திடீரென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை மாநில துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு தரப்பட்டது.
தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் நேற்று (பிப். 17) புதுச்சேரி வந்தார். இன்று (பிப். 18) காலை 9 மணிக்கு புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் தமிழிசை பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழிசை தனது உறுதிமொழியை தமிழில் வாசித்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டு பொறுப்பு ஏற்றார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் வரிசையில் 31-வது ஆளுநராக தமிழிசை பொறுப்பு ஏற்றார். அதேபோல், ஐந்தாவது பெண் ஆளுநர் இவர். இதுவரை யாரும் தமிழில் உறுதிமொழி வாசித்து பொறுப்பு ஏற்றதில்லை. முதலாவதாக தமிழில் உறுதிமொழி வாசித்து தமிழிசை பொறுப்பு ஏற்றுள்ளார்.
இந்நிகழ்வில், முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அனைவரும் தமிழிசைக்கு பூங்கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை தமிழிசை ஏற்றார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்று கையெழுத்திட்டார்.
தமிழில் உறுதிமொழி எடுத்தது பற்றி தமிழிசை கூறுகையில், "மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளேன். தமிழில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தமிழில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று கேட்டபோது புதுவை சரித்திரத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழில் உரை தயாரித்து பொறுப்பேற்றது மகிழ்ச்சி" என்றார்.
பொறுப்பேற்றவுடன் இட்ட முதல் கையெழுத்து தொடர்பாக கூறுகையில், "நான் முதலில் கையெழுத்து போடுவது சாமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை இட்டேன். இந்த கையெழுத்து நிச்சயமாக புதுவை மக்களின் தலையெழுத்தை மாற்றும் என நான் நம்புகிறேன். அடுத்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கான உதவித்தொகை வழங்கும் கையெழுத்தாக இருந்தது" என்று தெரிவித்தார்.
ராஜ்நிவாஸ் வளாகத்தில் பதவியேற்பு நிகழ்வுகளில் அனைத்து தமிழ் அதிகாரிகளும் வந்திருந்தனர். அதே நேரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட கிரண்பேடிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தும் அவர் இன்னும் ராஜ்நிவாஸில்தான் இருக்கிறார். வழக்கமாக புதிய ஆளுநர் வருவதற்கு முன்பாக பழைய ஆளுநர் புறப்பட்டு செல்வது மரபு. ஆனால், பதவியேற்பு நிகழ்வு ஒருபுறம் மும்முரமாக நடந்த சூழலில் ராஜ்நிவாஸிலுள்ள ஓர் அறையில் கிரண்பேடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment