Published : 18 Feb 2021 10:35 AM
Last Updated : 18 Feb 2021 10:35 AM

செங்குன்றத்தில் பள்ளி மாணவனை காரில் கடத்திய கும்பல்: விசாரணையில் சுவாரஸ்யத் தகவல்

திருவள்ளூர்

செங்குன்றத்தில் பட்டப்பகலில் பள்ளி மாணவர், 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டார். கடத்தல் கும்பலில் ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

பிரித்து அழைத்துச் சென்ற காதல் மனைவியைச் சேர்த்து வைக்கவே மைத்துனரை அக்காள் கணவர் ஆள் வைத்துக் கடத்தியது தெரியவந்தது. காரை மடக்கிப் பிடித்த போலீஸார் 6 பேரைக் கைது செய்து மாணவரை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மாரியப்பனின் மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு அவர் நடந்து செல்லும்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாணவரைக் கடத்தியது.

இதைப் பார்த்த மாணவனின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து தடுத்தனர். ஆனால், அந்த கும்பல் அவர்களைத் தாக்கித் தள்ளிவிட்டு மாணவரைக் கடத்த முயன்றது. இதனால் பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரைத் துரத்திச் சென்றனர். அப்போது அம்மாணவனை அக்கும்பல் காரில் இழுத்துப் போட்டு வேகமாகத் தப்பிச் சென்றது.

இதில் காரில் ஏற முடியாமல் தப்பி ஓட முயன்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை செங்குன்றம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் சுவாரஸ்ய சம்பவங்கள் வெளியாகின.

கடத்தப்பட்ட மாணவனின் சகோதரிக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதுக்கோட்டையைச் சேர்ந்த பூபதி என்பவருடன் திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை விட்டுப் பிரித்து, தாய் வீட்டுக்குப் பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். திரும்ப அழைத்தும் அவர் கணவரின் வீட்டுக்குத் திரும்பவில்லை.

இதனால் மனைவியின் குடும்பத்தினரை மிரட்ட கணவர் பூபதி, மனைவியின் தம்பியைக் கடத்தத் திட்டமிட்டதாகவும், அதற்காகத் தானும் சில நண்பர்களும் காரில் வந்து மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது காரில் கடத்தத் திட்டமிட்டுக் காத்திருந்ததாகவும், திட்டமிட்டபடி மற்றவர்கள் கடத்திச் செல்ல, தான் பொதுமக்களிடம் சிக்கியதாகவும், பிடிபட்ட சந்தோஷ் குமார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குடும்பத் தகராறு காரணமாக மாணவரைக் கடத்திச் சென்ற அக்காள் கணவர் உள்ளிட்டவர்களை போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடினர். அவர்களைப் பிடிக்க செங்குன்றம் போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலீஸாருக்குக் கடத்தல் சம்பவம் குறித்து தெரிவித்து, கார் குறித்த விவரங்களையும் அளித்தனர். நெடுஞ்சாலைத்துறை போலீஸார் கடத்தல் நபர்களையும் காரையும் மடக்கிப் பிடிக்கக் காத்திருந்தனர்.

அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கார் சென்றபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் மாணவரைக் கடத்திச் சென்ற காரை மடக்கிப் பிடித்தனர். காரிலிருந்த மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மாப்பிள்ளை பூபதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில், ''எனது மாமன் மாரியப்பனின் மகளைக் காதலித்து வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் புதுக்கோட்டையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தேன்.

இதுகுறித்து பெண்ணின் தந்தையான மாரியப்பனுக்குத் தெரியவந்ததால், எனது மனைவியை எனக்குத் தெரியாமல் சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். மனைவியை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றுவிட்டதால் அவரை மீண்டும் சேர்த்துவைக்க மாமா குடும்பத்தினரை மிரட்ட வந்தேன். அவர்கள் வீடு மாறிவிட்டதால் முகவரி தெரியவில்லை. எனது மனைவியின் தம்பியைக் கடத்தத் திட்டமிட்டோம்.

இதனையடுத்து எனது நண்பர்களுடன் காரில் வந்து பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய என் மனைவியின் தம்பியைக் கடத்திச் சென்றோம். அப்போது எங்களுக்கு உதவவந்த சந்தோஷ் குமார் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். நாங்கள் 5 பேரும் போலீஸாரிடம் பிடிபட்டோம்'' என்று பூபதி தெரிவித்தார்.

அச்சிறுப்பாக்கம் போலீஸார் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீஸார் கடத்தப்பட்ட பள்ளி மாணவரை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பூபதி, மணிகண்டன், சீனிவாசன், ஆதித்யா, சக்திவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

பள்ளி அருகே மாலையில் கடத்தப்பட்ட மாணவரை நள்ளிரவில் பெற்றோரிடம் போலீஸார் பத்திரமாக ஒப்படைத்தனர். அக்காவிற்காக தம்பியைக் கடத்திய பூபதி உள்ளிட்ட 6 பேர் மீது ஆள் கடத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து செங்குன்றம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x