Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையால், பின்னலாடைத் தொழில் வளர்ச்சிபெறும் என ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரசின் புதிய தொழில் கொள்கை, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஜவுளித்தொழில் மீது சிறப்பு கவனம் செலுத்தியதால், சர்வதேச சந்தைகளில் நிலவும் போட்டியை சமாளிக்கவும், தரமான ஆடைகளை உற்பத்தி செய்யவும் உதவியாக இருக்கும். தொழில் கொள்கையில் தொழிலாளருக்கான வீட்டு வசதித் திட்டங்களும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
திருப்பூர் போன்ற தொழில் நகரங்களின் நீண்ட நாள் தேவைகள் இதன்மூலம் நிறைவேறும். பனியன் தொழில் சிறு, குறு தொழில்கள் பட்டியலில் இருப்பதால், திருப்பூர் பின்னலாடைத் துறையின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்ற தமிழக அரசின் முடிவால் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிபெறும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவர். மேலும் தொழிலாளர்களின் திறன் வளர்ப்புக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் தொழில் கொள்கையானது, திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது ‘‘2021-ம் ஆண்டுக்கான தொழில் கொள்கை மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்கையை வெளியிட்டமைக்கு தமிழக அரசுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இப்புதிய கொள்கையின் வாயிலாக ரூ.2 லட்சம் கோடி புதிய முதலீடு, 2 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு, 25சதவீத ஏற்றுமதி பங்களிப்பு போன்ற தமிழக அரசின் இலக்குகள் நிறைவேறும்’’ என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறும்போது ‘‘புதிய கொள்கை வெளியீட்டில் பயனுள்ள அறிவிப்புகள் உள்ளன. சிறு, குறு தொழில்களுக்கு அதிக ஆதரவு அளித்திருப்பது நல்ல தகவல். தொழில் துறையினர் கேட்பதை, தமிழக அரசு செய்து தருகிறது. அறிவிப்புகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும். இதை தொழில் துறையினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT