Published : 17 Feb 2021 09:46 PM
Last Updated : 17 Feb 2021 09:46 PM
வழியனுப்பு நடத்தியும் ராஜ்நிவாஸிலேயே துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கிரண்பேடி தங்கியுள்ளார். இச்சூழலில் இன்று மாலை தமிழிசை புதுச்சேரி வந்தார். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பணி என்று பேட்டியளித்தார்.
துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு வழியனுப்பு நிகழ்வு ராஜ்நிவாஸில் இன்று மாலை நடந்தது.
டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா தலைமையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதையடுத்து ஆளுநர் மாளிகையில் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இச்சூழலில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழிசை புதுச்சேரி வரவுள்ளதால் அவர் வரும் முன்பாக மரபுப்படி அப்பொறுப்பு வகித்த கிரண்பேடி ராஜ்நிவாஸிலிருந்து வெளியேறவில்லை.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, "இன்னும் ஓரிரு நாளில் புதுச்சேரியில் இருந்து புறப்படுவேன். பொருட்கள் பேக்கிங் செய்யப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.
ராஜ்நிவாஸில் இன்னும் இரு நாட்கள் கிரண்பேடி தங்கவுள்ளார். அங்குள்ள விருந்தினர் அறையில் அவர் இருப்பார் என்று ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் விமானம் மூலம் தமிழிசை புதுச்சேரி வந்தார். அவருக்கு பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது.
அப்போது புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு செல்ல ராகுல் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்க இருந்த ராகுல், அச்சந்திப்பை ரத்து செய்து விட்டு புறப்பட்டார்.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசையிடம் கேட்டதற்கு, "தமிழ் பேசும் மாநிலத்துக்கு ஆளுநராக வந்தது மகிழ்ச்சி.
அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பணிதொடரும். நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் தெலுங்கானாவையும், புதுச்சேரியையும் இரட்டை குழந்தைகள் போல பாவிப்பேன்." என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்கட்சிகள் மனு அளித்துள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவீர்களா என்ற கேள்விக்கு. " நான் தற்போது தான் வந்துள்ளேன் இதை பற்றி முழுமையாக தெரியாது. தற்போது ஆளுநராக மட்டுமே புதுச்சேரிக்கு வந்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து விமான நிலையத்திலிருந்து நேரடியாக மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு ராஜ்நிவாஸ் சென்றார். அவரை ராஜ்நிவாஸில் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT