Last Updated : 27 Nov, 2015 08:43 AM

 

Published : 27 Nov 2015 08:43 AM
Last Updated : 27 Nov 2015 08:43 AM

வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்த முதலைகள்: கடலூர் மாவட்ட மக்களின் அடுத்த அச்சம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி கனமழை மற்றும் சூறைக் காற்று காரணமாக மாவட்டமே நிலைகுலைந்து போனது. சிதம் பரம், காட்டுமன்னார்கோயில் வட்ட பகுதியில் உள்ள முக்கிய நீர் நிலைகளான வீராணம் எரி, கான் சாகிப் வாய்க்கால், வடக்குராஜன் வாய்க்கால், பழைய கொள்ளிடம் ஆறியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் இப்பகுதியில் உள்ள நந்திமங்கலம், திருநாரையூர், வீர நத்தம், கீழவன்னீயூர், குமராட்சி, சிவாயம், வல்லம்படுகை, காட்டுக் கூடலூர், நாஞ்சலூர், வக்காரமாரி, மடப்புரம், கவரப்பட்டு, கண்டியமேடு, மாரியப்பாநகர், காட்டுக்கூடலூர், பூலாமேடு உள்ளிட்ட 100 கிராமங் களில் வெள்ள நீர் புகுந்தது.

அப்போது, வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் இருந்த ஏராள மான முதலைகளும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு குடியிருப்புப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தஞ்சம் புகுந்தன. தற்போது, மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கி உள்ள நிலையில், குளம் மற்றும் குட்டைகளில் இருந்து அந்த முதலைகள் வெளியேறி ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவை ஆடு, மாடுகளை பிடித்துச் செல்கின்றன. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

சில நாட்களுக்கு முன் கவரப்பட்டு கிராமத்தில் இதுபோல முதலை புகுந்தது. வனத்துறை ஊழியர்கள் வந்து 3 மணி நேர போராட்டத்துக்கு பின் முதலையை பிடித்தனர்.

இதுபோல, சிதம்பரம் பாலமான் ஆற்றுக் கரையோர பகுதிகளில் அடிக்கடி முதலைகள் புகுந்து மக்களை மிரட்டி வருகின்றன. வல்லம்படுகை, சிவாயம், தவர்த்தாம்பட்டு, இளநாங்கூர், வையூர், துணிசிரமேடு, கடவாச்சேரி, அம்மாபேட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இது குறித்து வல்லம்படுகை ஊராட்சி மன்ற தலைவர் கலை யரசன் கூறும்போது, “கான்சாகிப் வாய்க்கால், பழைய கொள்ளிடம், வடக்குராஜன் வாய்க்கால் ஆகிய வற்றில் அதிகளவு முதலைகள் உண்டு. அங்கு குளிக்க செல்பவர் களை இழுத்துச் சென்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்டோர் முதலை கடித்து இறந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், வெள்ள நீருடன் சேர்ந்து ஊருக்குள் முதலை கள் புகுந்துள்ளன. தற்போது, தண்ணீர் வடிவதால் வெளியே வர தொடங்கி யுள்ளன. எனவே, இப்பகுதியில் உள்ள முதலைகளை பிடித்து அப்புறப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் ரவிக்குமார் கூறும்போது, “சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் வெள்ளம் இடுப்பளவு சென்றது.

அப்போது, முதலைகள் வந்தி ருக்கும். தற்போது, வடிந்து வரும் தண்ணீரில் வாய்க்கால் மற்றும் ஆறுகளுக்கு முதலைகள் சென்றுவிடும். ஒருவேளை, குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலை தென்பட்டால் உடனே பிடித்து அப்புறப்படுத்தி விடுவோம்” என்றார்.

வனத்துறையினருக்கு உதவியாக முதலைகளை பிடிக்கும் பணியில் உள்ள நந்தி மங்கலம் ராஜூ கூறும்போது, “மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரில் வரும் முதலைகள் இங்குள்ள ஆறு, வாய்க்காலில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. பெரிய முதலைகளும் இங்கு உண்டு.

உணவு கிடைக்காதபோது ஆடு, கோழி, நாய்களை பிடிக்க ஊருக்குள் நுழைந்து விடும். தற்போது வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட முதலைகள் அனைத்தும் வயல்வெளி, குட்டை ஆகியவற்றில் உள்ளன. இவற்றை கண்காணித்து தான் பிடிக்க முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x