Published : 17 Feb 2021 05:00 PM
Last Updated : 17 Feb 2021 05:00 PM
ஏழை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் அனைத்துக்கும் தீர்வு. இதுவே முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று ராகுல் காந்தி மீனவர்கள் முன்பாகத் தெரிவித்தார். அடுத்த முறை வரும்போது கடலுக்கு அழைத்துச் செல்லவும் ராகுல் கோரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி புதுச்சேரிக்கு இன்று நண்பகலில் வந்தார். அதைத் தொடர்ந்து சோலை நகரில் தென்னந்தோப்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மீனவர்களுடன் உரையாடினார். அந்நிகழ்வுக்குப் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி திறந்த வெளியில் நடந்ததால் வெளியே இருந்து பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்தனர்.
இந்நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதாவது:
"மத்திய பாஜக அரசு 3 விவசாயச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது. விவசாயிகள் நிலத்தில் பயிரிடுவதுபோல், மீனவர்கள் கடலில் தொழில் செய்கின்றனர். விவசாயிகளுக்குத் தேசிய அளவில் தனித் துறை உள்ளது. ஆனால் மீனவர்களுக்குத் தனியாக மத்திய அமைச்சர் இல்லை. மீனவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் யாரைச் சந்திக்க முடியும்?
கடலுக்குச் சென்று தொழில் செய்வது மிகவும் அபாயகரமானது. மீனவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு மீன் பிடிக்கச் செல்கிறீர்கள் என்பது தெரியும். விவசாயிகளுக்கு வழங்கியது போல மீனவர்களுக்கும் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். காப்பீடு, மீன்பிடி உபகரணங்கள் நவீன மயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த மீனவர்களை உரையாடக் கூறினார். அப்போது ஆங்கிலத்தில் பட்டதாரிப் பெண் பேசத் தொடங்கினார். ராகுல் அவரிடம், "தமிழில் பேசுங்கள்- அப்போதுதான் இங்கு உள்ளோருக்கு நன்றாகப் புரியும். அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்த ராகுல் இறுதியில் பேசும்போது, "மத்தியில் ஆளும் பாஜகவினர் சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் நசுக்குகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் அனைத்து உரிமையும் செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். எங்கள் கொள்கை அதற்கு மாறுபட்டது. நாங்கள் சிறு, குறு தொழில்களை உயர்த்த வேண்டும் என எண்ணுகிறோம். அதுதான் நாட்டுக்கு வலு சேர்க்கும்.
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, கரோனா காலத்தில் பாதுகாப்பு அளிக்காதது சிறு தொழில்களை அழித்துள்ளது. பிரதமர் மோடி ஒருசில வசதி படைத்தவர்கள் மீனவப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என நினைக்கிறார். லட்சக்கணக்கான மீனவர்களுக்கு இப்பகுதி சொந்தமாக இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
நாம் பிரித்தாளப்படுகிறோம். ஏழை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இவை அனைத்துக்கும் தீர்வு. அதுவே முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அரசியல்வாதிகள் வருவார்கள், பேசிவிட்டுச் செல்வார்கள். உங்கள் எண்ணத்தைக் கேட்கமாட்டார்கள். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்கவே வந்துள்ளேன். நான் பேச வரவில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மீண்டும் நான் வருவேன். அப்போது என்னைக் கடலுக்கு அழைத்துச் செல்லுங்கள். மீன்பிடி கஷ்டங்களை நானும் அறிந்துகொள்கிறேன்" என்று குறிப்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்.
அதையடுத்து அங்கிருந்தோர் அவரைச் சாப்பிட அழைத்தனர். அடுத்த நிகழ்வு இருப்பதால் புறப்படுவதாக ராகுல் கூறிவிட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT