Published : 17 Feb 2021 02:46 PM
Last Updated : 17 Feb 2021 02:46 PM
புதிதாக கூட்டணியைப் பற்றிச் சிந்திக்கவில்லை. யாரும் இதுவரைக்கும் எங்களிடம் கேட்கவும் இல்லை. நாங்களும் கேட்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத்துக்கு மக்களிடத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?
மிகச் சிறப்பாகச் சென்று கொண்டுள்ளது. ஆளுங்கட்சியினர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், தொலைக்காட்சி மூலமாக அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுத் தரப்பில் உளவுத்துறை மூலமாக அவர்களும் கண்காணித்துக் கொண்டு, அதில் மக்கள் சொல்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டம் வெற்றியுடன் சென்று கொண்டிருக்கிறது.
முதல்வர் - அதிமுக தலைவர்கள் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களை கவனிக்கிறீர்களா?
செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுகிறேன். மற்றபடி அதிக நேரம் கிடைப்பதில்லை. இன்றைக்கு அரசாங்கத்தின் பணம் எப்படி எல்லாம் விரயம் ஆக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். 'வெற்றி நடை போடும் தமிழகம்' என்பதற்குப் பதிலாக 'வெற்று நடைபோடும் தமிழகம்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்.
அந்தப் பிரச்சாரப் பயணத்தில் திமுகவை முதல்வர் குறிப்பாக, உங்களைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துப் பேசி வருகிறாரே?
அரசியலில் விமர்சனத்தை ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நியாயமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப் போகிறோம். ஆத்திரத்தின் உச்சத்திற்கு, உச்சாணிக்குச் சென்று, எதைப் பேசுகிறோம் என்று தெரியாமல் முதல்வர் என்பதை மறந்து பேசுவதைப் பார்க்கும்போது வேதனைப்படுகிறேன். அவருக்காக அல்ல, அந்த முதல்வர் பதவிக்காக.
திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளாரே?
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நடந்திருக்கலாம். அது அவ்வப்போது கண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இருக்கும் அதிமுக ஆட்சியில் எப்படி சட்டம் ஒழுங்கு தலைவிரித்து ஆடுகிறது, மோசமான நிலைக்குப் போய்விட்டது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரே ஒரு உதாரணம், பொள்ளாச்சி பாலியல் கொடுமை. பதவியில் இருப்பவர்கள், அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறித்து ஆதாரத்தோடு செய்திகள் வெளியாகியுள்ளன. பாலியல் பலாத்காரம், ரவுடித்தனங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போகும் நிலைமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
100 நாட்களில் தீர்வு என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து இருக்கிறீர்கள். ஆனால், இது ஒரு ஏமாற்று வேலை என்று முதல்வர் குற்றம் சுமத்துகிறாரே?
10 வருடங்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஏமாற்றமாக தான் தெரியும். மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக்கூட இந்த ஆட்சி தீர்த்து வைக்கவில்லை.
ஒன்பதரை லட்சம் மனுக்களில் ஐந்து லட்சம் மனுக்களுக்கு நான் தீர்வு கண்டிருக்கிறேன் என்று முதல்வர் சொல்கிறாரே?
எல்லாம் சொல்வார்கள். ஆனால், இதுவரைக்கும் வெளிப்படையாக ஆதாரத்துடன் சொல்லவில்லை. இவ்வளவு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு தொழிற்சாலைகள் வந்துள்ளன, இவ்வளவு முதலீடு வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். வெள்ளை அறிக்கை விடுங்கள் என்று எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரைக்கும் அவர்கள் விடவில்லை. அதேபோலத்தான் இதுவும்.
மக்களின் குறைகளை 100 நாட்களில் எப்படியும் தீர்க்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து திட்டமிட்டு அதற்கென்று ஒரு தனித்துறை அமைத்து தனி அதிகாரிகள் அமைத்து அந்த வேலைகளைத்தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இந்தத் திட்டத்தை அறிவித்திருக்றோம்.
அது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நிச்சயமாக முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கூட்டணியில் கருணாநிதி காட்டிய அணுகுமுறையை ஸ்டாலின் காட்டுவாரா என்பது சந்தேகமே என்று சொல்கிறார்களே?
தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த கூட்டணி என்பது வேறு. இப்போது இருக்கும் கூட்டணிகள் வேறு. எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு கட்சியைப் பொறுத்தவரையில் அதிகமாக கேட்பதுதான் உரிமை. அது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், இருப்பதைப் பகிர்ந்து நிச்சயமாகக் கொடுப்போம். கருணாநிதி என்ன விதிமுறைகளைக் கடைப்பிடித்தாரோ அதேபோல விதிமுறைகளை நானும் கடைப்பிடிப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
பாமக, தேமுதிக உங்கள் கூட்டணிக்கு வருவதில் உங்களுக்கு எதுவும் தயக்கம், நெருக்கடிகள் இருக்கிறதா?
நெருக்கடியும் இல்லை. தயக்கமும் இல்லை. இப்போது இருக்கும் கூட்டணியிலேயே பயணிப்பதாக முடிவெடுத்திருக்கிறேன். புதிதாக கூட்டணியைப் பற்றிச் சிந்திக்கவில்லை. யாரும் இதுவரைக்கும் எங்களிடம் கேட்கவும் இல்லை. நாங்களும் அவர்களிடம் கேட்கவில்லை. அது அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. அதனால் அந்தப் பிரச்சினைக்கு இடமில்லை.
ஜெயலலிதாவோடு ஒரு நேரடி அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று நினைப்பு இருக்கிறதா?
நான் பலமுறை நேரடியாக எதிர்த்துப் பேசியிருக்கிறேன். சட்டப்பேரவையில் விவாதங்கள் நடந்துள்ளன. எதிர்த்தெல்லாம் பேசியிருக்கிறோம். அரசியல் ரீதியாகப் பேசியிருக்கிறேன். ஜெயலலிதா இறந்தது வருத்தம் அளிக்கக் கூடியதாகவே உள்ளது.
சசிகலா போர்க்கொடி தூக்குவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், சமாதானக் கொடியைத் தூக்குவதான விஷயங்கள்தான் நமக்குத் தெரிகிறது?
அது உங்களுடைய ஊகம். என்ன நடக்கப் போகிறது என்று அதிமுகவினர்தான் கவலைப்பட வேண்டும். எங்களுக்குக் கவலை இல்லை.
1989-ல் அதிமுக 2 அணியாக இருந்ததுபோல இன்றைக்கும் 2 அணியாக இருக்கிறது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்தது. அதே மாதிரியான ஒரு எண்ணத்தில் திமுக இருக்கிறதா?
யாருடைய பிளவையும் பயன்படுத்தி, அதை ஆதாயமாக வைத்து திமுக வர வேண்டிய அவசியமும் இல்லை. அந்தத் தேவையும் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையும் இல்லை.
இந்த விஷயத்தை நாம் சரி செய்துகொள்ளலாம்; குறைபட்டுக் கொள்ளக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது என்று நீங்கள் உங்களைப்பற்றி நினைக்கக்கூடிய விஷயம் என்றால், அது எதுவாக இருக்கும்?
எவ்வளவோ பேர் பத்திரிகைகளில் விமர்சனம் செய்கிறார்கள்; மேடைகளில் விமர்சனம் செய்கிறார்கள்; நமக்குப் பிடிக்காதவர்கள் செய்கிறார்கள். அதில் நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும்.
நல்லதாக இருந்தால், கட்டாயம் எடுத்துக்கொள்வேன்; கெட்டதாக இருந்தால், அதனைப் புறந்தள்ளிவிடுவேன். அதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்.
தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல நினைக்கக்கூடிய, சொல்லவிரும்பக்கூடிய விஷயம் எது?
10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அதிமுக ஆட்சி, தமிழகத்தைப் பாதாளத்திற்குக் கொண்டு போய்விட்டு இருக்கிறது.
மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டுக்குள், மாநில உரிமைகளைப் பறிகொடுத்த நிலையில், ஓர் அடிமைத்தனமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன்; இதைத்தான் கொள்கையாக இந்த ஆட்சி வைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு சூழலில், இன்னும் மூன்று மாதத்தில் வரக்கூடிய தேர்தல் மூலமாக மக்கள் நிச்சயமாக நல்ல பாடத்தை அவர்களுக்கு வழங்குவார்கள். வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை நான் மிகுந்த பணிவுடனும், அன்புடனும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
மக்கள் அதற்கான ஆதரவை, நம்பிக்கையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்களா?
நிச்சயமாக, உறுதியாக. அதிலொன்றும் சந்தேகமே கிடையாது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றிதான் திமுக தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணிக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT