Published : 17 Feb 2021 01:19 PM
Last Updated : 17 Feb 2021 01:19 PM
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி தேர்தல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது. இன்று ராகுல் வருகையைத் தொடர்ந்து அடுத்ததாக பிரதமர் மோடியும், பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரவுள்ளனர்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆளும் கட்சியான காங்கிரஸில் உள்ள எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்யும் சூழல் நிலவுகிறது. மீதமுள்ளோரைத் தக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் போல தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யைப் புதுவைக்கு வரவழைத்துப் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
முதல் கட்டமாக இன்று ராகுல் காந்தி புதுவைக்கு வருகிறார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர் அங்கிருந்து சிறிய விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமானத் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் முத்தியால்பேட்டை சோலை நகருக்குச் செல்கிறார். அங்குள்ள தென்னந்தோப்பில் மீனவப் பெண்களோடு ராகுல் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு வருகிறார். அங்கு மாணவிகளோடு ராகுல் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து ஏஎப்டி திடலுக்கு மாலை 4 மணிக்கு வருகிறார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 2ம் கட்டமாக மீண்டும் ஒரு முறை ராகுல் காந்தி புதுவைக்கு வருவார் என்றும் கட்சித் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே புதுவையில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னணித் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
பாஜக தரப்பில் கூறுகையில், ''பிரதமர் மோடி வரும் 25-ல் புதுச்சேரி வருகிறார். பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார். அதையடுத்து மார்ச் 1-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகிறார். மேலும் பல மத்திய அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி வரவுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து புதுச்சேரியில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT