

இன்னும் மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என, அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
மக்களவை திமுக உறுப்பினரும் கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி, கடந்த 15ஆம் தேதி தொடங்கி இன்று (17ஆம் தேதி) வரை மூன்று நாட்கள் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பிலான இந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் 15, 16 ஆகிய தேதிகளில் தருமபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இன்று தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் அவர் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூர் அடுத்த நாகமரை பகுதியில் காவிரி ஆற்றைக் கடந்து செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு காவிரி ஆற்றின் மீது மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக கனிமொழி நாகமரை பகுதிக்குச் சென்றார். அங்கு ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் பகுதியைக் காவிரி ஆற்றில் படகில் பயணித்து அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறும்போது, "நாகமரை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது தொடர்பான கோரிக்கை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். இன்னும் மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான ஆட்சி அமையும். அப்போது நாகமரை பகுதி மேம்பாலம் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான இன்பசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.