Published : 17 Feb 2021 09:23 AM
Last Updated : 17 Feb 2021 09:23 AM

கிரண்பேடி நீக்கம் தாமதமான நடவடிக்கை; பாஜகவின் கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்

சென்னை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டார். குடியரசுத் தலைவரிடம் முதல்வர் நாராயணசாமி புகார் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருளாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணைநிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் தடுத்து, ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி - அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணைநிலை ஆளுநர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதல்வராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட மத்திய பாஜக அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம்.

புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை, இறுதிக் கட்ட முயற்சி. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வைத்து பாஜக செய்த தரம் தாழ்ந்த அரசியலையும், அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x