Published : 16 Feb 2021 09:28 PM
Last Updated : 16 Feb 2021 09:28 PM

ஆரவாரமில்லாமல் இருக்கும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தல் களத்தில் வெற்றிக்காக திமுக தனியாகப் போராடுகிறதா?

கனிமொழி, ஸ்டாலின் (கோப்புப் படம்)

மதுரை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

போதிய அவகாசம் இல்லாததால் அதிமுக, திமுக கட்சிகள், கூட்டணியை இறுதி செய்யாமலேயே தொகுதிப் பங்கீடு தொடங்குவதற்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன.

அதிமுகவில் முதல்வர் கே.பழனிசாமி, அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாது தனியாகவும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறார்.

திமுகவில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள், தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்கின்றனர்.

கனிமொழி, மதுரையில் 2 நாள் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார். உதயநிதி திண்டுக்கல், தேனியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார்.

தென் மாவட்டங்களில் இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் கடந்த ஜனவரி 29 முதல் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேனியில் ஸ்டாலினைவிட உதயநிதிக்கு பிராம்மாண்ட கூட்டம் திரட்டி கட்சியினர் அசத்திவிட்டனர். ஸ்டாலின் 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார்.

ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதன் கூட்டணிக் கட்சிகள் இதுவரை பிரச்சாரக் களத்திற்கு வரவில்லை. அந்தக் கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதிப் பக்கீடு முடியட்டும் என்று இன்னும் தேர்தல் பணிகளில் ஆர்வமில்லாமல் உள்ளனர்.

தற்போது சசிகலா வருகை, அதிமுக சற்று தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையில் அதை சாதகமாக்க திமுக கூட்டணி கட்சிகள் கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.

கனிமொழி, உதயநிதி (கோப்புப்படம்)

அதனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தும், அந்தக் கட்சிகளை தேர்தல் களத்தில் பார்க்க முடியவில்லை. திமுகவும் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தேர்தல் களத்தில் திமுக கூட்டணியில் திமுக மட்டுமே தேர்தலை சந்திக்கவும், வெற்றிக்காக போராடுவதும் போல் உள்ளது. ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பும் திமுக மேல் விழுந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கியதே தோல்விக்கு முக்கிய காரணம் என திமுக கணக்குப்போடுகிறது.

அதனால், இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளை பற்றியும், கூட்டணியைப் பற்றியும் கவலைப்படாமல் தனியாக திமுக தேர்தல் வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டன.

ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி போன்றவர்கள் செல்லும் இடங்களில் பெயருக்குக் கூட கூட்டணி கட்சியினர் வருவதில்லை.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளை அடையாளம் காணுவதிலும், அந்தத் தொகுதிகளை திமுகவிடம் தொகுதி பங்கீட்டில் கேட்டுப் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றனர். தொகுதிப் பங்கீடு முடிந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூட்டணிக் கட்சிகள் காத்திருப்பதுபோல் உள்ளது.

ஆனால், அதிமுக ஆளும்கட்சியாக அதிகாரபலத்துடன், பணப்பலத்துடன் செல்லும் இடமெல்லாம் திமுகவுக்கு போட்டியாக பிரம்மாண்ட கூட்டத்தைக் காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

வழக்கம்போல் கூட்டணிக் கட்சிகள், தொகுதிப் பங்கீடு முடிந்ததும் எங்கள் மீது சவாரி செய்யும் எண்ணத்திலேயே உள்ளனர். தற்போது அவர்கள் திமுகவுடன் இணைந்து பிரச்சார வியூகங்களை வகுக்கவில்லை. அவர்களும் தனியாக தேர்தல் பணிகளில் ஈடுபடவும் இல்லை. ராகுல்காந்தி மட்டும் தமிழகத்திற்கு இரு முறை வந்தார். ஒரு முறை ஜல்லிக்கட்டு பார்க்க மதுரைக்கு வந்தார். மற்றொரு முறை, தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வந்து சென்றார். அதோடு காங்கிரஸ் கட்சியினர், முடங்கிவிட்டனர்.

வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அவர்கள் கட்சி நிர்வாகிகளைக் கூட தேர்தல் பணிகளுக்கு முடுக்கிவிடவில்லை. அதனால், மாவட்டங்களில் கூட திமுகவினரிடம் அதன் கூட்டணி கட்சிகள் இனக்கமான முறையில் இல்லை. இந்த முறை திமுகவும், கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பது போலவே அதன் பிரச்சாரம் வியூகம் உள்ளது.

இது ஆபத்தும் கூட. நாட்கள் குறைவாக உள்ளதால் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு வரை காத்திருக்காமல் தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வேண்டும். திமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x