Last Updated : 16 Feb, 2021 08:06 PM

2  

Published : 16 Feb 2021 08:06 PM
Last Updated : 16 Feb 2021 08:06 PM

பிரதமர் மோடி கைகளைத் தூக்கிப் பிடித்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்: ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் பதிலடி

மதுரை

பிரதமர் மோடி கைகளைத் தூக்கி பிடித்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர் என ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழகம் வந்த பிரதமர் மோடி முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் கைகளை உயர்த்திப் பிடித்து போஸ் கொடுத்திருந்தார். அதனை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலை முக்கியத் தேர்தலாக கருதி பாஜக களமிறங்கியுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும். பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலினால் எப்போதும் ஆட்சி அமைக்க முடியாது. திமுக தேசிய வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்பதால் பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாகவே மாறிவிடும். இதுவரை குறைதீர் கூட்டம் நடத்தாத திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இப்போது தேர்தலுக்காக குறைதீர் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி கைகளைத் தூக்கி பிடித்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். ராகுல் செல்லும் இடமெல்லாம் தோல்வி தான் ஏற்படுகிறது. ராகுல் தமிழகம் வந்த போது மு.க.ஸ்டாலின் குறித்து எதுவும் பேசவில்லை.

தமிழகத்தில் சிறந்த ஆட்சி வழங்கிய ஜெயலலிதாவின் படத்துக்கு பிரதமர் மோடி மலர் தூவியது தவறில்லை. திமுக கூட்டணி உடையும் நிலை உள்ளதால் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

வேளாண் சட்டங்களை எந்த விவசாயிகளும் எதிர்க்கவில்லை. விவசாயிகள் மோடியை தோழனாக பார்க்கின்றனர். பிரதமர் தமிழகம் வருகையின் போது கோ பேக் மோடி என சமூக வலைதளங்களில் பதிவிடுவது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் அநாகரிகம். மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பின்னால் திமுகவினரும், தேசவிரோதிகளும் உள்ளனர்.

புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி செயல்பாடு பிடிக்காமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை குறையும்.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x