Published : 16 Feb 2021 07:40 PM
Last Updated : 16 Feb 2021 07:40 PM

ஓசூரில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு: இறுதிக்கட்டப் பணிகளில் வனத்துறையினர் தீவிரம்

ஓசூர்

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த இறுதிக்கட்டப் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் ஆகிய 7 வனச்சரகங்களிலும், தருமபுரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் வனவிலங்குகளின் இறுதிக்கட்ட கணக்கெடுப்புப் பணிகளில் வனத்துறைக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 11-ம் தேதியன்று பயிற்சி முகாமுடன் தொடங்கிய இப்பணிகள் நாளை (17-ம் தேதி) நிறைவு பெறுகின்றன.

இதில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள உரிகம் வனச்சரகக் காப்புக் காடுகளில் யானை, முதலை, சாம்பல்நிற அணில் உள்ளிட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கணக்கெடுப்புகளில் யானைகள் கூட்டம், புள்ளிமான் கூட்டம், சாம்பல் நிற அணில்கள், காட்டெருமைகள் கூட்டம், முதலைகள், மயில்கள், குள்ளநரிக் கூட்டம், செந்நாய்க் கூட்டம் மற்றும் உயரமான மலைகளில் மரப்பொந்துகளில் வாழும் இருவாச்சி என்ற அரிய வகைப் பறவைகள் உள்ளிட்ட பெரும்பாலான வன உயிரினங்களை உரிகம் வனச்சரகத்தில் நேரில் பார்த்துக் கணக்கெடுத்து வருவதாக வனக்குழுவினர் கூறுகின்றனர்.

இவற்றில் சிறுத்தைகள் மற்றும் காட்டுப் பூனைகள் உள்ளிட்ட ஒருசில வன விலங்குகளை மட்டும் அதன் கழிவுகள், கால் தடம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறும்போது, ''உரிகம் வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணிகளில் 15 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனத்துறையினர் 2 பேரும், தன்னார்வலர்கள் 3 பேரும் என மொத்தம் 5 பேர் உள்ளனர்.

இந்தக் குழுவினர் உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல், தக்கட்டி, கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லஹள்ளி மற்றும் உரிகம் ஆகிய 6 காப்புக் காடுகளிலும் தினமும் 6 அல்லது 7 கி.மீ. தொலைவு நடந்து சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காப்புக் காடுகள் வரை வாகனத்தில் செல்லும் இந்தக் குழுவினர், அதன்பிறகு காப்புக் காடுகளின் உள்ளே கால்நடையாக நடந்து சென்று கணக்கெடுத்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி காலையில் 3 மணி நேரமும் மாலையில் 3 மணி நேரமும் நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்புப் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணியில் பிலிகல் காப்புக்காட்டின் ஊடாகச் செல்லும் காவிரி ஆற்றுப்படுகை ஓரங்களில் உள்ள மரங்களில் காணப்படும் அரியவகை வன உயிரினமான பெரிய சாம்பல் நிற அணில்களைக் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறைக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வகையான அணில்கள் அரியவகை வன உயிரினப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது'' என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x