Last Updated : 16 Feb, 2021 07:28 PM

2  

Published : 16 Feb 2021 07:28 PM
Last Updated : 16 Feb 2021 07:28 PM

பட்டியலின மாணவிக்கு மருத்துவக் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பாமல் முறைகேடு: பேராசிரியர் கல்யாணி குற்றச்சாட்டு

தேர்வுக்குழு, மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்.

விழுப்புரம்

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிக்கு மருத்துவக் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பாமல், அவர் மருத்துவக் கல்லூரி இடத்தை நிராகரித்ததாக தேர்வுக்குழு, மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம் உண்மைக்கு மாறான தகவல் அனுப்பியதாக பேராசிரியர் கல்யாணி குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனம், ரோஷணையில் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சந்திரலேகா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி 8-ம் வகுப்பு வரை இலவசமாகப் படித்து, திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 2020 மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சியில் கலந்துகொண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற இவர், மாவட்ட அளவில் 10-வது இடத்திலும் மாநில அளவில் 271-வது இடத்திலும் உள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 6-வது வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை சுயநிதிப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாணவி சந்திரலேகா

மாணவி சந்திரலேகா 1-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை பயின்ற தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி ஒரு சுயநிதிப் பள்ளிதான். இங்கு அனைவருக்கும் குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு இணங்க இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. எனவே, இம்மாணவிக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில உதவும்படி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு மாணவியின் தாயார் மகேஸ்வரி மனு அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் சென்னை, கீழ்ப்பாக்கம், தேர்வுக்குழு, மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து இம்மாணவியின் தாயார் மகேஸ்வரிக்கு அனுப்பிய கடிதத்தில், "7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி கடந்த ஜனவரி 4-ம் தேதி மாணவி சந்திரலேகாவுக்குக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்தபோதிலும் அவ்விடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகிவிட்டார். எனவே, இவரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது" என்று கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் கல்யாணி

இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் கல்யாணி, "இது உண்மைக்கு மாறான தகவலாகும். மாணவி சந்திரலேகாவுக்குக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கடிதம் வரவில்லை. கலந்தாய்விலும் மாணவி சந்திரலேகா கலந்துகொள்ளவே இல்லை. ஆனால், மாணவி சந்திரலேகா, கலந்தாய்வில் பங்கேற்றதாகவும், இருந்த 3 இடங்களிலும் சேர அவர் தேர்வு செய்யவில்லை என்ற தவறான தகவலையும் ஏன் அனுப்பியுள்ளார்கள் எனத் தெரியவில்லை. அப்படியெனில் இவருக்கான இடம் எங்கே போனது?

கலந்தாய்வுக்குக் கடிதம் அனுப்பாமல், கலந்தாய்வில் பங்கேற்காத மாணவியின் இடம் பறிக்கப்பட்டுள்ளது சமூக அநீதியாகும். சமூக நீதிக்கு எதிரானதாகும். மாணவியின் இடம் பறிக்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேட்டினை அரசு உடனடியாகக் கண்டறிந்து, மாணவி சந்திரலேகாவை மருத்துவக் கல்வியில் சேர்த்துக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x