Published : 16 Feb 2021 05:26 PM
Last Updated : 16 Feb 2021 05:26 PM
80 சதவீத சாலை விபத்துக்களை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றினாலே தடுக்கலாம் என மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறினார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் இவ்வாண்டுக்கான சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதையொட்டி சிறப்பு வாகன தணிக்கையின்போது, தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து, தலைக்கவசம் ஒன்று வழங்கி போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி முயற்சியில் காளிதாஸ் என்பவர் இயக்கிய போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் விதமாக ‘உயிர்க் காவலன்’ என்ற விழிப்புணர்வு குறும்படம் வெளி யீட்டு விழாவும் நடந்தது.
மாநகராட்சி ஆணையர் விசாகன், போக்குவரத்து துணை ஆணையர் சுகு மாறன், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், ஹனா ஜோசப் மருத்துவமனை நிர்வாக செயல் இயக்குநர் கவிதாபென் வெளி யிட்டனர்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் விசாகன் பேசியதாவது: மதுரை காவல்துறை, மாநகராட்சி, பிறதுறை அதிகாரிகள் எந்தவித மனக்கிலேசமும் இன்றி ஒற்றுமையாக பணியாற்றுகிறோம்.
இந்நேரத்தில் மக்களின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஒன்றிணைந்து நிறைவேற்றப்படும். மாட்டுத்தாவணியில் காவல் நிலையத்திற்கு இடம் வேண்டும் என்றபோது, மாநகராட்சி கடை ஒன்றை காலி செய்து கொடுத்துள்ளோம்.
இதுபோன்ற பார்க்கிங், சாலைப் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சிக்கு சிறப்பு புகார் யையத்திற்கு (8428425000) தகவல் தெரிவிக்கலாம். ரோடு போன்ற மாநகராட்சி நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாக இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
20 சதவீத சாலைகளில் மட்டுமே 80 சதவீத விபத்துக்கள் நடக்கின்றன. குடிபோதையின்றி, போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்கினால் தடுக்கலாம். விபத்தில்லா மதுரையை உருவாக்குவது ஓட்டுநர்கள் கையில் மட்டுமே இருக்கிறது, என்றார்.
காவல்துணை ஆணையர் சுகுமாறன் பேசும்போது, ‘‘ 2 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் மதுரை. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது சாலை உள்ளிட்ட மேம்பாடுப் பணிகள் நடக்கின்றன.
மாசி வீதிகளில் சிமெண்ட் சாலை, கழிவுநீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகளின் பலன் ஒருமாதத்தில் தெரியும். மக்களுடன் நேரடியாக பழகுபவர்கள் ஓட்டு நர்கள் மட்டுமே. நீங்கள் போக்குவரத்து விதிகளை மதித்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உங்களது ஒத்துழைப்பு இருந்தால் விபத்தில்லா நகரமாக மதுரையை உருவாக்க முடியும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆணையர்கள் திருமலைக்குமார், மாரியப்பன், உதவி ஆணையர் சூரக்குமார், காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, கார்த்திக், மருத்துவர் சூரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT