Published : 16 Feb 2021 03:20 PM
Last Updated : 16 Feb 2021 03:20 PM
பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புப் பகுதி அருகே வைப்பதற்கு மதுபானக் கடை ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ இல்லை. மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.
மதுரை தட்டான்குளம் பிரதான சாலை மற்றும் மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் உத்தரவிடக் கோரி தாஹா முகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள 5,422 எண்ணுடைய கடை பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடை மாற்றப்பட்டது குறித்தும், தமிழகத்தில் எத்தனை மதுபானக் கடைகள் உள்ளன? அமைவிட ஆட்சேபனை தொடர்பாக வந்த புகார்கள், நிராகரிக்கப்பட்ட புகார்கள் எத்தனை? மாற்றி அமைக்கப்பட்ட கடைகள் எத்தனை? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்துவைத்தது.
மேலும், பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புப் பகுதி அருகே வைப்பதற்கு மதுபானக் கடை ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ இல்லை. மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை என்று நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்கான பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி செலவிடுகிறது என்பதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, இதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகப் பார்க்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்பன உள்ளிட்ட பல நேர்மறையான முன்னேற்றங்களை அரசுக்குப் பட்டியலிட்ட நீதிபதிகள் அமர்வு, இறுதியாக, நீதிமன்றத்தின் இந்த யோசனைகளைத் தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT