Published : 16 Feb 2021 02:11 PM
Last Updated : 16 Feb 2021 02:11 PM

புதுவையில் மத்திய அரசின் அடக்குமுறை, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி; ராகுல் வருகை புது நம்பிக்கையை ஏற்படுத்தும்: கே.எஸ்.அழகிரி  

சென்னை

மத்திய அரசின் அடக்குமுறையினாலும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளாலும் கடுமையான எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிற புதுச்சேரி மாநிலத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவது அங்கே மிகப்பெரிய எழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“தலைவர் ராகுல் காந்தி இரண்டு கட்டமாக மக்களைச் சந்தித்து உரையாடிய சுற்றுப் பயண நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்று, தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டி, அண்டை மாநிலமான புதுச்சேரியில், நாளை மாலை 3 மணியளவில் ரோடியர் மில் மைதானத்தில் நடைபெறுகிற மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.

தமிழகமும், புதுச்சேரியும் வெவ்வேறு மாநிலங்களாக இருந்தாலும், இரண்டு மாநிலங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் மக்களின் வாழ்க்கை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாகும். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி, முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைந்தது முதற்கொண்டு அந்த ஆட்சியைச் சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தால் அதை எதிர்கொண்டு முறியடித்துக் காட்ட முடியும்.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்டிருக்கிற ஆளுநர் கிரண்பேடி தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக கற்பனையாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நாள்தோறும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதை எதிர்த்து, ஆளுநர் மாளிகை முன்பாக அம்மாநிலத்தின் முதல்வரும், மற்ற அமைச்சர்களும் இரவு, பகல் பாராமல் அங்கேயே படுத்து உறங்கி போராட்டம் நடத்திய காட்சியை நாட்டு மக்கள் பார்த்தார்கள்.

இதைவிட ஜனநாயகத்திற்கு தலைக்குனிவை பாஜகவால் ஏற்படுத்த முடியாது. ஆளுநர் கிரண்பேடியால் எடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முறியடித்து ஆட்சியைப் பாதுகாத்து வந்தது.

மத்திய பாஜகவின் அடக்குமுறையினாலும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளினாலும் கடுமையான எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிற புதுச்சேரி மாநிலத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவது அங்கே மிகப்பெரிய எழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வருகை புரிந்து பாஜகவின் ஜனநாயக விரோதச் செயல்களைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறார்.

எனவே, இந்தப் பின்னணியில் புதுச்சேரியில் நடைபெறுகிற தலைவர் ராகுல் காந்தியின் பொதுக் கூட்டத்திற்கு, அண்டை மாவட்டங்களாக இருக்கிற கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் பார் சிறுத்ததோ, படை பெறுத்ததோ என்பதை உணர்த்துகிற வகையில் அணி அணியாக வாருங்கள்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x