Published : 16 Feb 2021 01:12 PM
Last Updated : 16 Feb 2021 01:12 PM
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நாளை வியாசர்பாடி - மகாகவி பாரதியார் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 75 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெட்ரோல் - டீசல் விலையும் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.19 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக இந்தூரில் 97.35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வியாசர்பாடி - மகாகவி பாரதியார் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி இன்று (பிப்.16) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர், மாதவரம், திருவள்ளூர் தொகுதிக் குழுக்களின் சார்பாக நாளை (பிப்.17) காலை 10 மணிக்கு வியாசர்பாடி - மகாகவி பாரதியார் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எ.சுப்பிரமணி தலைமை தாங்குகிறார். மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் போராட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மாநிலக்குழு உறுப்பினர் கி.சு.குமார், துணைச் செயலாளர் எம்.வசந்தகுமார், கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அருள், வட்டச் செயலாளர் காத்தவராயன், மாதர் சங்கம் செண்பகம் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்".
இவ்வாறு எம்.எஸ்.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT