Published : 15 Feb 2021 09:01 PM
Last Updated : 15 Feb 2021 09:01 PM
"பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காக திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது; அதைக் காக்கும் அரசாக தி.மு.க. அரசு அமையும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது. இது ஆளுங்கட்சியில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்து விட்டது. அதனால் இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமி அவசர அவசரமாக பல டெண்டர்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து ஏற்கெனவே ஆளுநரிடம் ஒரு புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறோம்.
முதல்வர் பழனிசாமி தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டு அதில் கமிஷன் வாங்கியிருக்கிறார். சட்டத்தை மீறி கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறோம்.
அதனை நீதிமன்றம் விசாரித்து ‘இதில் உண்மை இருக்கிறது. எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது.
ஆனால் சிபிஐ விசாரணை மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் சென்று தடை வாங்கி வைத்திருக்கிறார்.
தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் 3,384 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டு கடைசிநேர வசூல் செய்திருக்கிறார்கள். 3384 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை துணிச்சலாக செய்கிற ஆட்சிதான் இந்த ஆட்சி.
இவ்வாறு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து உரையாற்றினார்.
ஆபத்தில் இருந்து திமுக மீட்டெடுக்கும்:
சமூக வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். யாருக்கும் யாரும் அடிமை அல்ல. எல்லார்க்கும் எல்லாம். இத்தகைய உன்னதமான நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம்.
ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செலுத்தி இருக்கிறோம். ஐந்து முறையும் திமுக அரசு கொள்கை அரசாக கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக அதே நேரத்தில் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக அமைந்திருந்தது. சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் – பெண்ணுரிமை - மாநில சுயாட்சி - இளைஞர் நலன் - உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ஆட்சியாக அமைந்திருந்தது.
ஆனால், இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார். வேளாண்மையை நம்பி இருக்கும் விவசாயிகளா? மூன்று வேளாண் சட்டங்களால் அச்சமடைந்து இருக்கிறார்கள்.
நிலம் பாதுகாக்கப்படுமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். விவசாய சலுகைகள் நீடிக்குமா? இலவச மின்சாரம் தொடருமா? என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
நெசவாளப் பெருமக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா? பருத்தி, நூல்கள், தயாரிக்கும் துணிகளுக்கு உரிய விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் அச்சத்தில் இருக்கிறார். அரசு ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள், போராடும் ஊழியர்கள் மீது வழக்குகள் பாய்கிறது, சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பறிக்கப்படுகின்றன. ஓய்வூதியதாரர்கள் நலன்கள் மொத்தமாக ரத்து செய்யப்படுகிறது. எனவே, 'அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு' என்ற நம்பிக்கையோடு வேலையில் சேர்ந்தவர்கள் அச்சப்படுகிறார்கள்.
அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் தலை தூக்கிவிட்டது. தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.
படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைகள் கிடைப்பதில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. உரிய ஊதியம் கிடைப்பது இல்லை! பெண்கள், சொந்தக் காலில் நிற்பதற்காக கழக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன, கடன்கள் தரப்பட்டன.
ஆனால் அவை இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது. கிராமசபை கூட்டமாக இருந்தாலும், இது போன்ற கூட்டமாக இருந்தாலும் விரக்தி அடைந்த வாழ்க்கை நெருக்கடியைச் சந்திக்கும் ஏராளமான பெண்களை நான் பார்க்கிறேன்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்காக திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட மகத்தான கொள்கைதான் சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு. இன்று மத்திய அரசின் தவறான கொள்கையால் அந்த சமூகநீதிக் கொள்கைக்கு தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
1969 ஆம் ஆண்டு முதல்முதலில் முதலமைச்சரானவர் தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் உருவாக்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார்கள். அந்தப் பரிந்துரைப்படி சமூகநீதியை அமல்படுத்தினார்கள்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 18 சதவிகிதமும் - பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதமும் - பொதுப்பிரிவினருக்கு 51 சதகிதமும் வழங்கிய தலைவர் தான் கருணாநிதி.
இந்த முப்பதாண்டு காலத்தில் கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து வேலைக்கு போய் முன்னேற கருணாநிதி கொடுத்த இடஒதுக்கீடு மிக முக்கியக் காரணமாக இருந்தது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையை சட்டமாக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும். பட்டியல் இனச் சமூகமாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தமிழர்களாக நினைத்து பாதுகாக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
அவர்களது பாதுகாப்புக்கு நலத்திட்டங்களை உருவாக்கும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. இன்றைக்கு மத்திய அரசின் தவறான கொள்கையல் சமூகநீதிக் கொள்கைக்கு தடையேற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சமூகநீதியைக் காப்பது ஒன்று தான் தமிழினத்தின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமானது. தமிழர்களின் எதிர்காலம் இதில் தான் அடங்கி உள்ளது.
சிறுபான்மையினரான மக்களுக்கு அச்சம் தருவதாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாறிவருகிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் மத்திய பாஜக அரசு அமல்படுத்தலாம்.
சாலைகள் போடுவது - போட்ட சாலைகளையே தோண்டி மறுபடி போடுவது - பாலம் கட்டுவது; தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டுவது - கட்டடம் கட்டுவது - இது ஒன்று தான் பழனிசாமி அரசில் நடக்கிறது. இதுவும் மக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை.
இதில் மட்டும் தான் பணம் அடிக்க முடியும் என்பதற்காக 10 கோடி செலவாகும் என்றால் அங்கே 50 கோடி பில் போடுவது. 50 கோடி செலவாகும் என்றால் 300 கோடி போடுவது - இது தான் பழனிசாமி ஆட்சி கொள்ளை அடிக்கும் பாதையாக உள்ளது.
பொதுப்பணித்துறை - உள்ளாட்சித் துறை ஆகிய இரண்டுக்கு மட்டும் பணத்தை ஒதுக்கி பங்கு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பழனிசாமியும் வேலுமணியும், அ.தி.மு.க. அமைச்சர்களும். அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பிரச்னையையும் தீர்க்கவில்லை. பொதுமக்களின் பிரச்சனையையும் தீர்க்கவில்லை! தங்கள் கையில் கிடைத்த அதிகாரத்தை பத்தாண்டு காலமாக பாழாக்கிவிட்டார்கள். மொத்தத்தில் பொதுமக்களுக்கு அச்சம் தருகின்ற அரசாக அதிமுக அரசு மாறிவிட்டது.
இந்த அச்சத்தை போக்கும் அரசாக திமுக அரசு அமையும். மக்களின் அச்சத்தைப் போக்கும் அரசாக மட்டுமல்ல - வளர்ச்சியில் உச்சத்தை தொடும் அரசாக திமுக அரசு அமையும்.
ஒரு அரசாங்கம் மனது வைத்தால், ஒரு தனிமனிதனின் பிரச்சினையை நிச்சயம் தீர்க்க முடியும். ஒரு தனிமனிதனின் பிரச்சினைக்காக, ஒரு மணி நேரம் ஒதுக்கி அப்பிரச்னையை பற்றி சிந்தித்தாலே போதும், அதற்கான உரிய பரிகாரத்தை நிச்சயம் காண முடியும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். தீர்க்கமுடியும் என்று என் மனம் சொல்கிறது. அதற்குத் தேவை அரசியல் அதிகாரம். ஆட்சி அதிகாரம். மக்கள் வழங்க இருக்கும் ஆட்சி அதிகாரத்தின் மூலமாக, மக்களின் பிரச்னைகளை நிச்சயம் தீர்க்க முடியும்.
அதிமுக. அரசு செய்ய மறந்ததை - செய்ய மறுத்ததை - செய்வேன் என்று சொல்லி ஏமாற்றியதை - தி.மு.க. அரசு செய்யும்!
இவ்வாறு ஸ்டாலின் நிறைவுரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT