Published : 23 Nov 2015 08:42 AM
Last Updated : 23 Nov 2015 08:42 AM
அண்ணா மேம்பாலம் அருகே மற்றொரு பாதைக்கு மாறிச் செல்லும் வசதியுடன் ரூ.400 கோடி செலவில் பிரம்மாண்டமான மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையாகவும், 21 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட பாதையாகவும் (13 ரயில் நிலையங்கள்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் வழிப்பாதையில் சைதாப்பேட்டையில் இருந்து மே தினப் பூங்கா வரையில் முதல் வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ் இடையே இரு வழிப்பாதையில் சுரங்கம் தோண்டும் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதேபோல், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் கணிசமாக முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.
இதற்கிடையே, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக பல்வேறு வசதிகளுடன் அண்ணா சாலையில் டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.400 கோடி செலவில் பிரம்மாண்டமான மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மக்கள் அதிகளவில் கூடும் முக்கியமான இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பெரிய அளவில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக அண்ணா மேம்பாலம் முக்கியமான இடமாக இருக்கிறது. இந்த இடத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் பிரிந்து செல்கின்றன.
அண்ணாசாலையில் மற்ற சாலைகளை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, அண்ணா மேம்பாலம் டிஎம்எஸ் பேருந்து நிலையம் அருகே ஏசி வசதி, 4 லிப்ட் மற்றும் 4 எஸ்கலேட்டர்கள் உட்பட பல்வேறு வசதியுடன் ரூ.400 கோடி செலவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தலா 4 பாதைகள் அமைக்கப்படவுள் ளன.
முக்கியமாக சைதாப் பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையில் செல்லும் இந்த சுரங்க வழிப்பாதையில் இங்குதான் ரயில்கள் மற்றொரு பாதைக்கு மாறிச் செல்லும் வசதி அமைக்கப்படவுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரயில்கள் அண்ணா மேம்பாலம் அருகே மற்றொரு பாதைக்கு மாறிச் செல்ல முடியும். அதேபோல், மே தின பூங்காவில் இருந்து வரும் மெட்ரோ ரயில்களும் இங்குதான் வேறொரு பாதைக்கு மாறிச் செல்ல முடியும். ஒட்டுமொத்த பணிகளில் 50 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2017-ம் ஆண்டு இறுதியில் சைதாப்பேட்டையில் இருந்த மே தின பூங்கா வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தவுள் ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT