Published : 15 Feb 2021 06:37 PM
Last Updated : 15 Feb 2021 06:37 PM

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கைதுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (பிப். 15) வெளியிட்ட அறிக்கை:

"கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்குட்பட்ட வீராநந்தபுரம் கிராமத்தில், சிதம்பரம் - திருச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்புடைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினரும், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான கே.வி.இளங்கீரனை காட்டுமன்னார்கோவில் காவல்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கி அவர்மீது பொய்வழக்குப் புனைந்து கைது செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது .

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக வீராநந்தபுரம் கண்டமங்கலம், குறுங்குடி ஆகிய ஊராட்சிகளில் விளைநிலங்கள் ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு சென்ட்டுக்கு ரூ.7,000 மட்டுமே வழங்கியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஒரு சென்ட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்பட்டிருப்பதைப் போல கடலூர் மாவட்டத்திலும் வழங்க வேண்டுமென இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், 09.02.2021 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இளங்கீரன் மனு அளித்துள்ளார். மறுநாள் 10.02. 2021 அன்று வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீடுகளை அப்புறப்படுத்த சென்றபோது அவர்களிடம் இளங்கீரன், மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து, ஏற்கெனவே மனு அளித்துள்ளோம் என்றும் , தீர்வு எட்டப்படும் வரை வீடுகளை இடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது, காவல்துறை அதிகாரிகள், அவரைத் தாக்கி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மக்களுக்கான கோரிக்கையை எழுப்பிய அவரைக் கைதுசெய்திருப்பது தமிழக அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளங்கீரனை, உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவரைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அத்துடன் கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை பாகுபாடற்ற முறையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x