Published : 15 Feb 2021 06:20 PM
Last Updated : 15 Feb 2021 06:20 PM
மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 15) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
"ராகுல்காந்தி மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இச்சுற்றுப்பயணத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரோடு கலந்துரையாட இருக்கிறார். சில இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகைபுரிந்தார். மக்கள் பார்வையில் படாமல் பாதுகாப்பான வாகனத்தில் பயணம் செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ராகுல்காந்தியைப் போல மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு:
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி 4-ம் தேதி ரூபாய் 25 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 15 ஆம் தேதி ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் ரூபாய் 220 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு காரணமாக லட்சக்கணக்கான குடும்ப பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இது மே 2014 இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ரூபாய் 412 ஆக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் ஒரு சிலிண்டர் விலை பாஜக ஆட்சியில் ரூபாய் 373 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி, கடந்த 6 ஆண்டுகளில் ரூபாய் 20 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்ட மக்கள் விரோத பாஜக அரசுக்கு, சாதாரண ஏழை, எளிய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதையே இந்த விலை உயர்வு காட்டுகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து மார்ச் முதல் வாரத்தில் மத்திய பாஜக அரசை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும்.
தேவேந்திர குல வேளாளர்:
தேவேந்திர குல வேளாளர் பொது பெயருக்கான மசோதா நாடாளுமன்றத்தில் வரும் கூட்டத் தொடரில் தாக்கலாகும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு ஐந்தாண்டுகள் கழித்து தேர்தலுக்கு 60 நாட்கள் இருக்கும் நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இதன்மூலம் 7 பிரிவுகளாக இருந்த சமுதாயம் ஒரே பிரிவாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதை நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தது. இதன்மூலம் காங்கிரஸின் கோரிக்கைக்கு காலம் கடந்து வெற்றி கிடைத்திருக்கிறது.
மெட்ரோ ரயில்:
9 கி.மீ. தூரத்திற்கான விரிவாக்கமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை நகரைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 14 ஆயிரத்து 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 45 கி.மீ. தூரத்திற்கு சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை தற்போது பயணிகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்காக ஜப்பான் வங்கியிடம் ரூபாய் 8,590 கோடி கடன் பெற்றுத் தந்தவர் பிரதமர் மன்மோகன்சிங்.
மெட்ரோ ரயிலை எதிர்த்து மோனோ ரயில் திட்டத்தை ஆதரித்தவர் ஜெயலலிதா. அதற்காக அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் மெட்ரோ ரயில் திட்டத்தை கடுமையாக முடக்கி வைத்தவர் ஜெயலலிதா. மெட்ரோ ரயில் திட்டம் தடைகளை மீறி சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை கம்பீரமாக 10 கி.மீ. தூரம் மேம்பாலம் மூலம் செல்வதை பார்த்து வியப்படையாதவர்களே இல்லை. இதற்கு காரணம் மன்மோகன்சிங் ஆட்சி தான்.
தமிழக பாஜக தலைவருக்கு பதில்:
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பொறுப்பேற்றது முதற்கொண்டு எதிர்காலமே இல்லாத பாஜக-வுக்கு சப்பை கட்டு கட்டுவதற்காக வரம்புகளை மீறி பேசி வருகிறார். வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் இடையே நடக்கிற யுத்தம் என்று கூறியிருக்கிறார். யார் தேசபக்தர்கள்? யார் தேச விரோதிகள்?
1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் காந்திய தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போராடி, சிறை சென்று 1947 இல் சுதந்திரம் பெறப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சுதந்திரப் போராட்டத்தில், இன்றைய பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், ஒரு துரும்பையாவது எடுத்து போட்டதுண்டா ? ஜனசங்கம், பாஜக தலைவர்கள் எவராவது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒரே ஒரு நாள் சிறைக்கு சென்றதுண்டா? சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத இன்றைய பாஜக, இந்தியாவில் ஆட்சி செய்வது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று துன்பங்களை அனுபவித்தவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானமாகும். இந்நிலையில், இந்தியாவின் விடுதலைக்கு பங்களிக்காத தேசத் துரோகிகளின் கூடாரமாக இருக்கிற பாஜக, தேசபக்தர்களின் சங்கமமாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை விமர்சனம் செய்வதற்கு எல். முருகனுக்கு என்ன தகுதியிருக்கிறது?
வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள்:
தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுள்ள ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளடக்கிய மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் ரூபாய் 1,124 கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டும் ரூபாய் 2,400 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிற காவிரி டெல்டா விவசாயிகள் வாங்கிய கடனில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 1,124 கோடி. ஆனால், சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டும் ரூபாய் 2,400 கோடி தள்ளுபடி. இதை ஒப்பிடுகிற போது ஆளுங்கட்சியினர் விவசாயிகள் பெயரில் மிகப்பெரும் தொகையை கடனாக பெற்று இன்றைக்கு கடன் ரத்து மூலம் சலுகை அடைந்துள்ளனர். இதன்மூலம் பாரபட்சமான நடைமுறையை அதிமுக கையாண்டிருப்பதாக குற்றம்சாட்டுகிறேன். இது குறித்து, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT