Last Updated : 15 Feb, 2021 05:22 PM

 

Published : 15 Feb 2021 05:22 PM
Last Updated : 15 Feb 2021 05:22 PM

‘யுஜிசி தகுதி பெற்ற எங்களையும் பணிவரன்முறைக்கான நேர்காணலுக்கு அழையுங்கள்’: மதுரையில் கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்

மதுரை

கடந்த ஓராண்டுக்கு முன், அரசு மற்றும் தனியார் கலை அறிவியல், தொழில்நுட்பம், கல்வியியல் கல்லூரிகளில் கவுர விரிவுரையாளராக பணிபுரிவோர் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என மானியக்குழு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் ஏற்கெனவே பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பல்கலை மானியக் குழு நிர்ணயித்த தகுதியை பெற்றிருக்கிறார்களா என, அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகம் ஆய்வு செய்து இறுதிப் பட்டியல் தயாரித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அந்தந்த பல்கலை., நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட சுமார் 41 உறுப்புக் கல்லூரிகளில் கடந்த ஓராண்டுக்கு முன், 14 உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

எஞ்சிய 27 கல்லூரிகளும் 2020 டிசம்பரில் அரசுக் கல்லூரிகளாக மாற்றி, மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பணி வரன்முறைக்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வரை உறுப்புக்கல்லூரிகளில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட மாதங்கள் வரை ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலை நிர்வாகமே சம்பளம் வழங்குகிறது.

இதற்கிடையில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட உறுப்புக்கல்லூரிகளில் பணிபுரியும் யுஜிசி கல்வித்தகுதி வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை பணிவரன்முறைப்படுத்தும் நோக்கில் சான்றிதழ்களைக் கல்லூரி முதல்வர்கள் மூலம் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களில் சமர்பிக்க, சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டது.

குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவத்துடன் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி, பிஎச்டி தகுதிக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து மண்டலம் வாரியாக பணிவரன்முறைக்காக சான்றிழ்கள் சமர்பித்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு சென்னையில் நேர்காணல் நடக்கும் நிலையில், மதுரை மண்டலத்தில் அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர், வேடசந்தூர் உட்பட 27 உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் அழைக்கப்படவில்லை என, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை, சாத்தூர்,திருமங்கலம், வேடசந்தூர் கல்லூரிகளில் பணிபுரியும் 10க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் இன்று மதுரை செல்லூர் பகுதியிலுள்ள மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘‘உறுப்புக் கல்லூரிகளாக இருந்து முதற்கட்டமாக அரசு நிர்வாகத்துடன் இணைக்கப்பட்ட 14 கல்லூரிகளை மற்றும் ஏற்கெனவே அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பணிவரன்முறைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

தகுதி இருந்தும் பிற 27 கல்லூரிகளில் பணிபுரிந்தவர்களை அழைக்கவில்லை. யுஜிசியின் முழுத்தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். குடும்ப நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சூழலில் பணிபுரியும் எங்களையும் பணிவரன்முறைக்கான நேர்காணலுக்கு அழைக்கவேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x