Last Updated : 15 Feb, 2021 05:18 PM

1  

Published : 15 Feb 2021 05:18 PM
Last Updated : 15 Feb 2021 05:18 PM

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்பு அதிகம்: வைகோ பேச்சு

நிதியை பெற்றுக் கொண்ட வைகோ. அருகில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் உள்ளனர். படம்: ஜெ.மனோகரன்

கோவை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக கோவை, திருப்பூர் கட்சி ரீதியிலான மாவட்டங்களின் சார்பில், தேர்தல் நிதியளிப்பு விழா, வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று (பிப். 15) நடைபெற்றது. மதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன்குமார் தலைமை வகித்தார். மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி முன்னிலை வகித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில், கோவை மாநகர மாவட்ட மதிமுக சார்பில் ரூ.30 லட்சத்து 89 ஆயிரம் தொகை வசூலித்து பொதுச்செயலாளர் வைகோவிடம் தரப்பட்டது. அதேபோல், கோவை புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட மதிமுக, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, திருப்பூர் புறநகர் மாவட்ட மதிமுக ஆகியவை சார்பிலும் நிதி வசூலித்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கினர்.

நிதி குவிந்து கிடக்கிறது

அதன் பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

"சோதனையான காலக்கட்டத்தில், மொத்தம் ரூ.80 லட்சத்து 88 ஆயிரம் நிதி திரட்டி தரப்பட்டுள்ளது. நிதி குவிந்து கிடப்பதால், அரசியல் கட்சிகள் நிதி கேட்டு செல்லக்கூடிய நிலைமை இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட நிதி கேட்டு செல்வதில்லை. மதிமுக தான் நிதி திரட்டிக் கொண்டு இருக்கிறது.

முகம் சுளிக்காமல், தங்களால் இயன்ற தொகையை மனமகிழ்ச்சியோடு மக்கள் தருகிறார்களே, அது தான் மக்களிடத்தில் நமக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். தமிழ்நாட்டின் நலன்களுக்காக, மேன்மைக்காக மதிமுக பாடுபட்டு வந்துள்ளது.

சுற்றுச்சூழலை காப்பாற்ற புதிய அமைப்புகளை மற்ற அரசியல் கட்சிகள் ஏற்படுத்தினாலும், மதிமுக தான் தமிழகத்திலேயே முன்னோடியாக இருந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியது.

பதவி முக்கியமில்லை

தமிழ்நாட்டின் நன்மைக்காக, வளத்துக்காக, வாழ்வாதாரங்களை காப்பதற்காக, இழந்து போன வாழ்வாதாரங்களை மீட்பதற்காக பாடுபடுகிற கட்சி மதிமுக. பதவி தான் முக்கியம் என்றால், கேபினட் மந்திரி பதவி தருகிறேன் எனக்கூறிய போதே நான் ஏற்றிருப்பேன். அதை நான் தேவையில்லை என்றேன்.

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருப்பேன். அப்போதும் நான் தொண்டர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தினேன். குறுக்குச்சால் ஓட்டும் வேலை மதிமுக தொண்டர்களிடம் எடுபடாது.

திமுக தலைமையில், அக்கூட்டணியில் செயல்படுவோம் என நாடாளுமன்றத் தேர்தலின் போது, முடிவெடுத்தோம். திராவிட இயக்கத்தை காப்பதற்கு, சனாதான இந்துத்துவ சக்திகளின் படையெடுப்பை தடுப்பதற்கு, பெரியார், அண்ணா லட்சியங்களை காப்பதற்கு, நம் பலத்தை நமக்கு இருக்கும் சக்தியை திமுகவுடன் இணைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பட்டோம்.

திமுக கூட்டணியில் இருப்போம்

நமது கொள்கை, லட்சியம் என்ற முறையில் நாம் செயல்பட வேண்டுமே தவிர, விமர்சனங்களுக்கு ஆளாகின்ற, ஒரு நிலைப்பாட்டை இனிமேல் எடுக்க முடியாது என்ற வகையில், இக்கூட்டணியில் நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தான் அதிகம் உள்ளது. இத்தேர்தல் முடிந்தவுடன், கட்சி பொதுக்குழுவைக் கூட்டி, சில நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து தலைமை எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தக்கூடிய உறுதியினை மேற்கொள்வோம்".

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மதிமுக கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x