Published : 15 Feb 2021 01:28 PM
Last Updated : 15 Feb 2021 01:28 PM

பெட்ரோல்- டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் விலையும் கடும் உயர்வு; மக்களுக்கு மோடி அரசு தந்த கொடூரப் பரிசு: ஸ்டாலின் கண்டனம் 

சென்னை

காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500க்குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டபோது கொதித்தெழுந்த பாஜகவினர் தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றனர் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “எய்மஸ்” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதைபடு படலத்தைத் தொடங்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500-க்குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. அதற்கே பாஜகவினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாக சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பாஜக அரசு. பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x