Published : 15 Feb 2021 10:27 AM
Last Updated : 15 Feb 2021 10:27 AM

நடிகை ஓவியா மீது சைபர் க்ரைம் பிரிவில் பாஜக புகார் 

சென்னை

சென்னை வரும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு வெளியிட்டதற்காக நடிகை ஓவியா மீது சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை, நீட், காவிரி பிரச்சினை போன்றவற்றில் தமிழக நலன் புறக்கணிப்பு, கஜா புயல், ஒக்கி புயலில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் பாராமுகமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

அந்த நேரம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டின. அந்த நேரத்தில் 'கோ பேக் மோடி' என்கிற ஹேஷ்டேக் வைரலானது. அது இந்திய அளவில் ட்ரெண்டானது. இதையடுத்து ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று நெட்டிசன்களால் போடும் பதிவு ட்ரெண்டானது. இதற்கு ஆதரவாக பாஜகவினர் 'வெல்கம் மோடி' எனப் பதிவிட்டனர்.

சமீபகாலமாக கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடி தமிழகம் வரவில்லை. இந்நிலையில் கரோனா தொற்று ஊரடங்குக்குப் பின் மோடி நேற்று சென்னை வந்தார். அவர் வருவதை ஒட்டி மீண்டும் 'கோ பேக் மோடி' ஹேஷ்டேக் நெட்டிசன்களால் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டது.

மோடி வருவதற்கு ஒரு நாள் முன்பு, நடிகை ஓவியா 'கோ பேக் மோடி' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நடிகை ஓவியாவின் அதிகாரபூர்வ பக்கம் அது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக அரசியல் கட்சியினர், நெட்டிசன்கள் பதிவு செய்வது வாடிக்கை. ஆனால், ஒரு முன்னணி நடிகை, பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற ஓவியா இவ்வாறு பதிவு செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தை 5 லட்சத்து 51 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அவரது 'கோ பேக் மோடி' பதிவை 19.8 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 58.7 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

ஓவியாவின் இந்த ட்வீட் குறித்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் சிபிஐசிஐடி அலுவலகத்தின் சைபர் செல்லுக்கு ஒரு புகாரை அனுப்பியுள்ளார்.

அதில், பிரதமர் வருகை குறித்துக் குறிப்பிட்டு, பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதத்தில் நடிகை ஓவியா 'கோ பேக் மோடி' எனப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓவியா மீது 124 (எ) (தேசதுரோக வழக்கு), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்), 294 (அவதூறு) 69 (எ) ஐடி பிரிவு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x