Published : 15 Feb 2021 08:44 AM
Last Updated : 15 Feb 2021 08:44 AM
அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இருக்கும் அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கான கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக தொடங்கி விட்டன. இருப்பினும், அதிமுக - தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வமாக இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தேமுதிக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
தமிழகத்தில் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் பெரிய ஆளுமை தலைவர்களாக இருந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த சட்டப்பேரவை தேர்தலை, மக்கள் பார்ப்பதுபோல் நானும் ஒரு வாக்காளராக பார்க்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது? வரும் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வாரா?
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் 75 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
பலமுறை அழைப்பு விடுத்தும் அதிமுக தரப்பில் இன்னும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடங்காதது ஏன்? இது கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா?
நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களது கூட்டணியில் பிரச்சினை இல்லை. கூட்டணி குறித்து எந்த கட்சியிலும் இன்னும் யாரும் பேச்சுவார்த்தை தொடங்கவே இல்லையே.
அதிமுக கூட்டணியில் தேமுதிக எவ்வளவு இடங்களை கேட்கும்?
அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, இது தொடர்பாக அறிவிப்போம்.
திமுக தரப்பில் தேமுதிகவுக்கு கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? அழைப்பு விடுத்தால் தேமுதிகவின் நிலைபாடு என்னவாக இருக்கும்?
இதற்கு ஒரே பேட்டியில் பதில் சொல்ல முடியுமா?, கட்சி தலைமை கூடி நிர்வாகிகளுடன் ஆலோசித்து பிறகு முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
தற்போது வரையில் இல்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். இருப்பினும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
மத்தியில் பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசின் பணிகளை தேமுதிக எப்படி பார்க்கிறது?
மத்தியிலும், மாநிலத்திலும் இரு அரசுகளும் மக்களுக்கான சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா காலத்திலும் தமிழக அரசு சிறப்பான பணியை மேற்கொண்டது. விவசாயிகளின் பயிர்கடனை ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளது பெரிய விஷயமாகும்.
10.3 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 சதவீதமாக குறைந்துள்ளதே?. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
2009-ம் ஆண்டில் தனித்து போட்டியிடும் போது தேமுதிகவின் வாக்கு சதவீதம் 10.3 சதவீதமாக தெரிந்தது. அதன்பிறகு, கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியதால் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறோம். கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை தவிர, மற்ற இடங்களில் தேமுதிகவுக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதம் கணக்கில் வருவதில்லை. இதனால், எங்களது வாக்கு சதவீதம் குறைந்ததுபோல் தெரியும். ஆனால், தேமுதிகவின் வாக்குசதவீதம் என்பது தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இப்போதும் தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி தேமுதிகதான்.
வரும் தேர்தலில் தேமுதிகவின் தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும்?
தேர்தல் தேதி அறிவித்த பிறகு, அடுத்தடுத்து எங்களது வியூகங்களை அறிவிப்போம். தேமுதிக தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகளை ஆற்றி வருகிறது. தேமுதிகவுக்கென செல்வாக்குள்ள தொகுதிகளையும் தேர்வு செய்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டுமென தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியிருக்கிறாரே? தேமுதிக தனித்து போட்டியிட தயாராகிறதா?
இதற்கு தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அர்த்தம் அல்ல. எங்களது கட்சியை பலப்படுத்தும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இடம்பெறும் எங்கள் அணி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT