Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM
திருநெல்வேலியில் மதிமுக தேர்தல் நிதி வழங்கும் விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் வைகோவின் படத்துக்கு இணையாக, அவரது மகன் துரை வையாபுரியின் படத்தையும் கட்சியினர் வைத்திருந்தனர். தமிழகத்தில் முக்கிய கட்சிகள் பலவற்றில் வாரிசுகள் கோலோச்சும் நிலையில் மதிமுகவிலும் சிறு சலனத்தை, இது ஏற்படுத்தியது.
வாரிசு அரசியல் குறித்து வைகோ தனது அரசியல் மேடைகளில் கடுமையாக கண்டிக்கிறார். 1993-ல் திமுகவிலிருந்து, மதிமுக பிரிவதற்கு வாரிசு அரசியலும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது மதிமுகவினர் அச்சிடும் சுவரொட்டிகள், பதாகைகளில் வைகோவின் மகன் துரை வையாபுரியின் படங்களும் இடம்பெறுகின்றன.
திருநெல்வேலியில் நடைபெற்ற தென்மண்டல தேர்தல் நிதி வழங்கும் விழா பதாகைகளிலும், துரை வையாபுரியின் படங்கள் இடம்பெற்றிருந்தன. விழா தொடங்குமுன்னரே இதுகுறித்த பேச்சு அரங்கினுள் எழுந்தது. செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
``அன்புமிகுதியால் கட்சியினர் இவ்வாறு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்ட வைகோ, ``அவரை முன்னிலைப்படுத்தவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. தேர்தலில் அவர் போட்டியிடவும் மாட்டார். மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை” என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, ``திமுகவில் இளைஞரணிச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று மட்டும் ஒற்றை வரியில் பதில்கூறி தர்மசங்கடத்தை தவிர்த்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைகோ, ``கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு தடைகளையும் தாண்டி கட்சியை நடத்தி வருகிறோம். மதிமுகவில் நாங்கள் செய்த தியாகத்தை சொல்லி எந்த காலத்திலும், எங்கள் குடும்பத்தினர் கட்சியில் உரிமை கோரமாட்டார்கள். குடும்பத்தில் யாரும் கட்சி பொறுப்புகளிலும் இல்லை” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
ஆனால் அவர் விரும்புகிறாரோ இல்லையோ, தொண்டர்களும், நிர்வாகிகளும் துரை வையாபுரியின் படங்களை சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் தொடர்ந்து இடம்பெறச் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்கு வெளியே வைகோவும் அவரது மகனும் ஒருசேர இருக்கும் படத்தை ரூ.20-க்கு பலரும் வாங்கிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT